Type Here to Get Search Results !

அக்.2ம் தேதி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழா தொடக்கம்


காஞ்சிபுரம் :


மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வரும் அக்.2 ஆம் தேதி முதல் அக்.14 ஆம் தேதி வரை நவராத்திரித் திருவிழா நடைபெறுகிறது.





மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும்,தசரத சக்கரவர்த்தி விரதம் இருந்து புத்திரப் பேறு கிடைத்த பெருமைக்குரிய கோயிலாகவும் இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் நவராத்திரி மண்டபத்துக்கு தினசரி சிறப்பு அலங்காரத்தில் காட்சியருளல், தினசரி கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் நடைபெறுவது வழக்கம்.


நிகழாண்டுக்கான நவராத்திரித் திருவிழா வரும் அக்.2 ஆம் தேதி காலையில் பூர்வாங்க சண்டி ஹோமத்துடனும்,மாலையில் வாஸ்து சாந்தி பூஜையுடனும் தொடங்குகிறது.


இதன் தொடர்ச்சியாக மறுநாள் அக்.3 ஆம் தேதி முதல் அக்.9 ஆம் தேதி வரை தினசரி உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகள் நிறைவு பெற்ற பின்னர் தினசரி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.


விழா நாட்களில் ஆலயத்தில் நவஆவர்ண பூஜை, கன்யா பூஜை, சுவாஷினி பூஜை முதலியனவும், தினசரி நவராத்திரி மண்டபத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


அக்.10 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது. அக்.11 ஆம் தேதி சரஸ்வதி பூஜையையொட்டி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அக்.14 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் கோயில் மணியக்காரர் சூரியநாரயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள்,பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.