காஞ்சிபுரம், ஆக.30:
காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் கோயில். இக்கோயில் வளாகத்திலேயே ரேணுகாதேவி அம்மன் ஆலயமும் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இக்கோயில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. முதலாம் நாள் யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றது.
2வது நாள் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை ராஜேஷ் குருக்கள் மற்றும் மகேஷ் குருக்கள் ஆகியோர் செய்தனர். கோட்ராம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.