நவராத்திரி (Navaratri) என்பது ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ஒன்பது நாள்களும் புனித காலமாகும் மற்றும் துர்கா தேவியை வழிபடும் பண்டிகையாகும். இதில் துர்க்கையின் பல்வேறு வடிவங்களை வழிபடுவது வழக்கம். நவதுர்க்கை வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களும் ஒன்பது விதமான நலன்களை நமக்கு அருளக் கூடியதாகும்.
நவராத்திரி, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தீமைகள் அனைத்தையும் அகற்றக் கூடியதாகும். பெண் சக்தியை போற்றும் இந்த பண்டிகையில் துர்க்கையே பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறாள். புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை துவங்கி, நவமி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரி காலமாக கொண்டாடப்படுகிறது.
பண்டிகை நாள் -நேரம்
இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை அக்டோபர் 03ம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு துவங்கி, அக்டோபர் 04ம் தேதி அதிகாலை 02.58 வரை உள்ளது. அக்டோபர் 03ம் தேதி சாரதா நவராத்திரியின் முதல் நாளாக கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி அல்லது தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டு அம்பாள், யானை வாகனத்தில் அமர்ந்து வரப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் எந்த நாளுக்கு எந்த நிறம், அந்த நாளுக்குரிய தேவியின் பெயர் என்ன என்பதை தெரிந்து கொண்டு வழிபடுவது சிறப்பானதாகும்.
கொலு
கொலு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி கொலுவை அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ல் துவங்கி, அதிகபட்சமாக 11 வரை கொலு படிகள் அடுக்கலாம். முடிந்த வரை மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை அடுக்கி, கொலு வைப்பது சிறப்பு. முதல் முறையாக கொலு வைக்க நினைப்பவர்கள், தொடர்ந்து வருடந்தோறும் கொலு வைத்த வழிபட முடியும் என்றால் அந்த வழிபாட்டினை துவங்கலாம். முடியாதவர்கள் எளிமையாக மற்ற முறைகளில் அம்பிகையை வழிபடலாம். அம்பிகையை பூக்கள் அல்லது குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்யலாம். தினமும் அபிராமி அந்தாதி பாடல் பாடி வழிபடுவது சிறப்பு.
- கொலு வைப்பதற்கான நல்ல நேரம் :
பூஜை நேரம் - மாலை 6 மணிக்கு மேல்
அக்டோபர் 03 - காலை 8 முதல் 9 வரை
பூஜை நேரம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
இந்த நேரத்தில் கொலு படிகளை அடுக்கி வைத்து, தீபாராதனை காட்டி நவராத்திரி வழிபாட்டினை துவக்கலாம். தினமும் மாலை 6 மணிக்கு பிறகு நவராத்திரி பூஜையை செய்வது சிறப்பானதாகும்.
துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் :
- 1ம் நாள் சைலபுத்ரி தேவி - பார்வதி
நவராத்திரியின் முதல் நாளில் நவதுர்க்கை வழிபாட்டில் அம்பிகையை சைலபுத்திரியாக வழிபடுகிறோம். இவள் ஆற்றலையும், வலிமையும் தரக் கூடிய தேவியாக விளங்குகிறாள். இவளுக்குரிய நிறமாக சிவப்பு நிறம் சொல்லப்படுகிறது.
சைலபுத்ரி (Shailaputri), என்பதற்கு மலைகளின் மகள் என்பது பொருளாகும். இவர் மலைகளின் மன்னர் “பர்வத ராஜனின் மகளாவார். மலைகளின் அரசன் என்று அறியப்படுகின்ற இமயத்தின் அரசனான ஹிமவானின் மகள் என்பதால் ஹேமாவதி என்கிற பெயர் இவருக்கு ஏற்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன,
பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் சக்தியின் உருவகமாக இருக்கும் சைலபுத்ரி தேவியின் நெற்றியில் பிறை நிலவு உள்ளது. இவரது வலது கையில் திரிசூலத்தையும் இடது கையில் தாமரை மலரையும் வைத்திருக்கிறார். இவர், நந்தி (காளை) மீது அமர்ந்து கொண்டு மலையில் சவாரி செய்பவராக காட்சியளிக்கிறார். இத்தேவியை வழிபட வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும்...
- 2ம் நாள் - பிரஹ்மசாரிணி தேவி - தவம் செய்யும் வடிவம்
நவராத்திரியின் இரண்டாம் நாளில் தேவியை பிரம்மசாரினியாக வழிபடுகிறோம். இவள் தூய்மை மற்றும் பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறாள். அடர் நீலம் இவளுக்குரிய நிறமாக சொல்லப்படுகிறது.
பிரம்மச்சாரிணி தேவி எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருப்பாள். வெண்ணிற ஆடையுடன், வலக்கையில் ஜெபமாலையையும் இடக்கையில் கமண்டலத்தையும் ஏந்திக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.
பிரம்மச்சாரிணி தேவியை வழிபட்டால் தெளிந்த அறிவும், ஞானமும் ஏற்படும். அறிவு என்பது படித்து அறிந்து கொள்வது. ஆனால் ஞானம் என்பது இறைவன் மட்டுமே அருளக் கூடியது. மனதில் உள்ள கவலைகளை தீர்த்து, தைரியத்தையும் தரக் கூடியவளாக இந்த பிரம்மச்சாரிணி தேவி விளங்குகிறாள். மிகப் பெரிய மனோதைரியத்தை தரக் கூடிய தேவியாக பிரம்மச்சாரிணி தேவி விளங்குகிறாள். அதோடு சேர்த்து மனிதனுக்கு தேவையான பொறுமையையும் தரக் கூடியவள். யோக நிலையில் சுவாதிஷ்டான சக்கர சக்தியையும் உயர்த்தித் தரக் கூடிய அம்பிகை..
- 3ம் நாள் சந்திரகாந்தா தேவி - சந்திரனின் ஆசி பெற்றவர்
நவராத்திரியின் 3ம் நாளில் அம்பிகையை சந்திரகாந்தா வடிவமாக வழிபடுகிறோம். இவள் அமைதியின் அடையாளமாக கருதப்படுகிறாள். இந்த தேவியே வாழ்க்கையில் மகிழ்ச்சி, இன்பங்கள், உற்சாகம் ஆகியவற்றை வழங்கக் கூடிய தேவியாக விளங்குகிறாள். மூன்றாம் நாளில் இவளே மஞ்சள் நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
சந்திரகாந்தா(Chandraghanta) பத்து கைகளை உடையவராக காட்சியளிக்கிறார். அவற்றில், திரிசூலம், கதை, (தண்டாயுதம்), வில் - அம்பு, வாள் , தாமரை மலர் , மணி மற்றும் கமண்டலம் எனப்படும் நீர் நிரம்பிய சிறு குடத்தை, அவரது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். எஞ்சியுள்ள ஒரு கையை ஆசீர்வதிக்கும் தோரணை அல்லது அபயமுத்ராவில் வைத்திருக்கிறார். இவர், ஒரு புலி அல்லது சிங்கத்தின் மீது சவாரி செய்பவராக இருக்கிறார். இது, துணிச்சலையும் தைரியத்தையும் குறிக்கிறது, மேலும், இவரது நெற்றியில் பிறை நிலவை அணிந்துகொண்டு, நெற்றியின் நடுவில் மூன்றாவது கண் வைத்திருக்கிறார். இவருடைய நிறம் பொன்னிறமாக உள்ளது. சிவபெருமான், சந்திரகாந்தாவின் வடிவத்தை அழகு, கவர்ச்சி மற்றும் கருணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதை காண்கிறார்.
இவர், எப்போதும் அரக்கர்களுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பவர்" என்று காரணங்கள் சொல்லப்படுகிறது. இவர், சண்டிகா அல்லது ராண்சண்டி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தனது அருள், துணிச்சல் மற்றும் தைரியத்தால் மக்களுக்கு வெகுமதி அளிப்பார் என்று நம்பப்படுகிறது. இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது.
- 4ம் நாள் - கூஷ்மாண்டா தேவி - பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி
நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை கூஷ்மாண்டா தேவியாக வழிபடுகிறோம். இவளே அனைத்து படைப்புக்களுக்கும் தாயாக கருதப்படுகிறாள். செல்வ செழிப்பை அருளும் தேவியாகவும் இருக்கும் இவளை பச்சை நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது என்று தேவி பாகவதம் போற்றுகிறது...சூரிய மண்டலத்தில் வசிக்கும் இத்தேவி, சூரியனைப்போல் பல திசைகளிலும் தன் ஒளியை வீசி அருள்புரிகிறாள்...சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள்...எட்டு கைகளில் சக்கரம், கதை, ஜெபமாலை, அமிர்த கலசம், தாமரை, வில், அம்பு, கமண்டலம் கொண்டு வீற்றிருக்கிறாள்...இவளை கூஷ்மாண்டா தேவி என்றும் அழைப்பர்...
- 5ம் நாள் - ஸ்கந்தமாதா தேவி - ஸ்கந்தாவின் தாயார்
நவராத்திரியின் 5ம் நாளில் அம்மனை ஸ்கந்தமாதாவாக நாம் வழிபடுகிறோம். அதாவது கந்தக் கடவுளின் தாயாக இருக்கும் வடிவில் வழிபடுகிறோம். இவள் நிலைத்தன்மையை கொடுப்பவள் என்பதால் இவளை சாம்பல் நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
ஸ்கந்தமாதா என்றால் தமிழக தெய்வமான கந்தனின் (முருகனின்) தாய் என்று பொருள்...மலைமகள் பார்வதி பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகப் பெருமானை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்று ஸ்கந்தமாதா என்னும் பெயருடையவளானாள்... மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள்... மேலிரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தியிருப்பள்... கீழ் வலது கரத்தால் ஆறுதலைகளுடைய முருகப்பெருமானை மடிமேல் இருத்தி அரவணைத்துக்கொண்டும், கீழ் இடது கரத்தில் அபய முத்திரையுடனும் சிங்கத்தின்மீது அமர்ந்துக் காட்சித் தருகிறாள்...
- 6ம் நாள் - காத்யாயினி தேவி - போராட்டத்தின் தேவதைகள்
நவராத்திரி 6ம் நாள் - நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை காத்யாயனி வடிவமாக வழிபடுகிறோம். இவள் போருக்கு உரிய தேவியாவாள். இவள் தைரியத்தையும், வெற்றியையும் தரக் கூடியவள் என்பதால் இவளை ஆரஞ்சு அல்லது காவி நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
காத்யாயனவர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவமிருந்து வேண்டிக் கொண்டபடி, தேவியானவள் அவருக்கு மகளாகப் பிறந்ததால் இப்பெயரைப் பெற்றாள்... காத்யாயினி புன்சிரிப்புடன் சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கிறாள்...புலியும் இவளது வாகனமே என்றும் கூறுவர்... நான்கு கைகள் கொண்டவள்...அக்கைகளில் அபய, வரத முத்திரைகளுடன் வாளும் தாமரையும் ஏந்தியிருப்பவள்...எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்ட இத்தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிவர்..
- 7ம் நாள்- காளராத்திரி தேவி தேவி - தீய சக்திகளை அழிக்கும் வடிவம்
நவராத்திரியின் 7ம் நாளில் அம்பிகையை காளராத்திரி தேவி வடிவமாக வழிபடுகிறோம். துர்கையின் இந்த வடிவம் தூய்மை மற்றும் தெய்வீகத்துடன் தொடர்புடையதாகும். அதனால் இந்த தேவியை வெள்ளை நிறத்தில் அலங்கரித்து வழழிபட வேண்டும்.
பிரகாசமான மாலை அணிந்துகொண்டு, மூன்று சிவந்த பெரிய கண்களைக் கொண்டவளாகக் காட்சி தருகிறாள்...கழுதை வாகனத்தில், இரு கைகளில் கத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களை ஏந்தியும் மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரை கொண்டுமிருக்கிறாள்...கரிய நிறமும், தலைவிரிக் கோலமுமாக இருப்பவள்...துட்டர்களை அழித்து வெற்றி கொள்பவளான, இத்தேவியை வழிபட, தீயவர்கள்/எதிரிகள் அழிவார்கள்.
- 8ம் நாள் - மஹாகௌரி தேவி - சுத்தமான வடிவம்
நவராத்திரியின் 8ம் நாளில் அம்பிகையை மகாகெளரியாக வழிபடுகிறோம். இந்த தேவி அன்பு, கருணை மற்றும் தெய்வீக சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். இவளை இளம் சிவப்பு நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும்.
இந்து மதத்தின் படி, மகாகௌரி தேவி தனது பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி கொண்டவர். இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் சூலத்தையும், மறு கரம் மணியையும் தங்கி நிற்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன. இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும்.
- 9ம் நாள் - சித்திதாத்ரி தேவி - முழுமையான அறிவின் கொடுப்பவர்
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான ஒன்பதாம் நாளில் அம்பிகையை சித்திதாத்ரி என்று பெயரில் வழிபடுகிறோம். இவள் ஞானம், அறிவாற்றல் ஆகியவற்றின் வடிவமாக திகழழழ்பவள் என்பதால் இவளை ஊதா நிறத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும். இவள் வெற்றியின் வடிவமாகவும், தெய்வீகத்தின் வடிவமாகவும் காட்சி தரக் கூடியவள்.
சிவனின் உடலின் ஒரு பாகம் சித்திதாத்ரி தேவியின் உடல் என்று நம்பப்படுகிறது. எனவே, அவர் அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். வேத வசனங்களின்படி, சிவபெருமான் இந்த தேவியை வணங்குவதன் மூலம் அனைத்து சித்திகளையும் அடைந்தார்.
பார்வதி தேவியின் மூல ரூபமாக சித்திதாத்ரி கருதப்படுகிறார். சிவப்பு உடையில் காணப்படும் அவளுக்கு நான்கு கைகள் உள்ளன. அவை சக்கரம், சங்கு, கதை மற்றும் தாமரை வைத்திருக்கின்றன. அவள் முழுமையாக பூத்த தாமரை அல்லது சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாம்யா, இஷித்வா மற்றும் வசித்வா என அழைக்கப்படும் எட்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் அல்லது சித்திகளைக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு எட்டு சக்திகளும் வழங்கப்பட்டதன் மூலம் சித்திதாத்ரியால் ஆசீர்வதிக்கப்பட்டார்.
நவராத்திரி மந்திரங்கள் :
- நவராத்திரி முதல் நாள் சைலபுத்திரி - ஓம் ஷம் ஷைலபுத்ரி தேவ்யாய நமஹ
- நவராத்திரி 2ம் நாள் பிரம்மச்சாரினி - ஹ்ரீம் ஸ்ரீம் அம்பிகையே நமஹ
- நவராத்திரி 3ம் நாள் சந்திரகாந்தா - ஐன் ஸ்ரீம் ஷக்தயே நமஹ
- நவராத்திரி 4ம் நாள் கூஷ்மாண்டா - ஐம் ஹ்ரீம் தேவ்யே நமஹ
- நவராத்திரி 5ம் நாள் ஸ்கந்தமாதா - ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியே நமஹ
- நவராத்திரி 6ம் நாள் காத்யாயனி - க்லீம் ஸ்ரீ த்ரினித்ரயே நமஹ
- நவராத்திரி 7 ம் நாள் காலாத்ரி - க்லீம் ஐம் ஸ்ரீ காளிகாயே நமஹ
- நவராத்திரி 8 ம் நாள் மகாகெளரி - ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் வரதாயே நமஹ
- நவராத்திரி 9 ம் நாள் சித்திதாத்ரி - ஹ்ரீம் க்லீம் ஐம் சித்தாயே நமஹ
அந்தந்த நாட்கள் தவிர தினசரி துர்க்கைக்குரிய இன்னும் சில சக்திவாய்ந்த மந்திரங்களையும் சொல்லி வழிபட்டு வந்தால் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.