காஞ்சிபுரம், அக்.2:
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி புதன்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் பெருந்தேவித் தாயாருடன் நூற்றுக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
புரட்டாசி மாத அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் காலையில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீ தேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு எழுந்தருளி கோயில் ராஜகோபுர நுழைவுவாயிலில் பெருந்தேவித் தாயாருடன் ஆழ்வார் சுற்றுப்பிரகாரம் வந்து நூற்றுக்கால் மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள்.
இதனையடுத்து நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்வாக வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் நூற்றுக்கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.