காஞ்சிபுரம், அக்.3:
மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான நவராத்திரி விழாவையொட்டி புதன்கிழமை காலையில் பூர்வாங்க சண்டி ஹோமமும், மாலையில் வாஸ்து சாந்தியும் நடைபெற்றது.
இதனையொட்டி வியாழக்கிழமை முதல் நாள் நிகழ்வாக உற்சவர் காமாட்சி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் தீப்பந்தங்கள் மற்றும் மங்கல மேள வாத்தியங்களுடன் ஆலய வளாகத்தில் உள்ள நவராத்திரி கொலுமண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு தீபாராதனைகளும், சூரசம்ஹாரமும் நடைபெற்றது. புல்லாங்குழல் வித்வான் பி.பாலாவாய் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெற்றது.
நவராத்திரி திருவிழா நடைபெறும் நாட்களில் தினசரி நவாவர்ணபூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, சதுர்வேத பாராயணம் ஆகியனவும் நடைபெறுகின்றன.
மாலையில் காமாட்சி அம்பிகை தினசரி கொலுமண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும்,சூரசம்ஹாரமும்,பக்தி இன்னிசை கச்சேரிகளும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி நவராத்திரி மண்டபம் வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அக்.10 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது.
மறுநாள் 11 ஆம் தேதி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். அக்.12 ஆம் தேதி விஜயதசமி நாளன்று தினசரி நடைபெற்று வந்த நவாவர்ண பூஜை நிறைவு பெறுகிறது.
வரும்.அக்.14 ஆம் தேதி கலசாபிஷேகமும்,மாலையில் அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் நவராத்திரி திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், செயல் அலுவலர் ச.சீனிவாசன், மணியக்காரர் சூரியநாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகர்கள்,பணியாளர்கள் செய்துள்ளனர்.