காஞ்சிபுரம், அக்.3:
காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் வருடாந்திர மகோத்சவத்தையொட்டி முதல் நாள் நிகழ்வாக உற்சவர் தேசிகன் சுவாமிகள் புதன்கிழமை சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ளது தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில்.இக்கோயில் வருடாந்திர மகோத்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.முதல் நாள் நிகழ்வையொட்டி காலையில் தங்கப்பல்லக்கில் ஸ்ரீ கோசம் ஞானமுத்திரையுடனும், மாலையில் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.விழா நடைபறும் நாட்களில் தினசரி காலையில் தங்கப்பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில் வெவ்வேறு வாகநத்திலும் தேசிகன் சுவாமிகள் வீதியுலா வரவுள்ளார்.
வரும் 9ஆம் தேதி தேரோட்டமும்,வரும் 12 ஆம் தேதி தேசிகன் சுவாமிகள் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி சந்நிதிக்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்து வரதரை தொழுது மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு அஞ்சலித் திருக்கோலத் தோடு திரும்பும் முக்கிய நிகழ்வும் நடைபெறுகிறது.
மாலையில் பூப்பல்லக்கில் விதியுலாவும், மறுநாள் 13 ஆம் தேதி கந்தப்பொடி வசந்தத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி, தக்கார் ப.முத்துலட்சுமி மற்றும் விளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகன் ஸ்ரவணம் டிரஸ்ட் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.