காஞ்சிபுரம், நவ.1
தீபாவளியையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து 183 சிவாலயங்களுக்கு அபிஷேகம் செய்வதற்கான பொருட்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து சிவாலயங்களுக்கு தீபாவளியன்று அபிஷேகம் செய்வதற்காக பல வகையான அபிஷேகப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி 40 வது ஆண்டாக காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 183 சிவாலயங்களுக்கு அபிஷேகப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக் கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டது.
அவையனைத்தும் சங்கர மடத்தில் மகா பெரியவர் அதிஷ்டானத்தின் முன்பாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மகேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களிடம் ஆலயங்களுக்கு எடுத்துச் செல்ல வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.