காஞ்சிபுரம், நவ.1-
தீபாவளிப் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ராஜவீதிகளில் வீதியுலா வந்தும், சங்கர மடத்துக்கு எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தீபாவளிப் பண்டிகையையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் மாநகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தார்.
வீதியுலாவின் போது ராஜவீதியில் உள்ள காக்கவாக்க சத்திர மண்டகப்படிக்கும் எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் அதனைத் தொடர்ந்து சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்துக்கும் எழுந்தருளினார்.சங்கர மட வளாகத்தில் காமாட்சி அம்மனுக்கும் மகா பெரியவர் அதிஷ்டானத்துக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் ஆலயத்துக்கு எழுந்தருளி கோயில் வளாகத்தில் உள்ள தீபாவளி மண்டபத்துக்கு எழுந்தருளினார். தீபாவளி மண்டபத்தில் ஆலய ஸ்தானீகர்களால் மந்திரபுஷ்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன் மேற்பார்வையில் ஸ்தானீகர்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக வீதியுலாவிற்கு புறப்படும் போது ஆலயத்தின் நுழைவு வாயிலில் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
ஐப்பசி மாத அமாவாசையையொட்டி வெள்ளிக்கிழமை தங்கத் தேரில் காமாட்சி அம்மன் பவனி வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.