காஞ்சிபுரம், நவ.1-
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை மற்றும் சுக்ர வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் தனித்தனியாக கேடயத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அமாவாசை தோறும் ஸ்ரீதேவி, பூ தேவியுடன் உற்சவர் வரதராஜ சுவாமி ஆஞ்ச நேயர் சந்நிதிக்கும், சுக்ர வாரத்தையொட்டி வெள்ளிக்கிழமை தோறும் பெருந்தேவித் தாயார் ஆலயத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனையொட்டி ஐப்பசி மாத அமாவாசையும், சுக்ர வாரமும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இணைந்து வந்ததையொட்டி பெருமாளும், பெருந்தேவித் தாயாரும் பவனி வரும் இரட்டைப் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாவதாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் வரதராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் அலங்கார மண்டபத்திலிருந்து புறப்பட்டு கோயிலின் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றது.
ஆஞ்சநேயர் சந்நிதியிலிருந்து ஆலயம் திரும்பி வந்து கோயில் நுழைவு வாயில் அருகில் உற்சவர் பெருந்தேவித் தாயாருடன் பெருமாள் ஆலய வளாகத்தில் உள்ள தோட்டத்துக்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் பெருமாளும், தாயாரும் ஆழ்வார் சுற்றுப்பிராரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரட்டைப் புறப்பாடு நிகழ்வினை காண திராளன பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்தனர்.
தீபாவளிப் பண்டிகை}தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் 4 மாட வீதிகளிலும் வீதியுலா வந்தார்.
ஆலயம் திரும்பியதும் தீபாவளி மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் கோயிலில் தீபாவளியையொட்டி கருட வாகனத்தில் பெருமாள் 4 ராஜவீதிகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.