காஞ்சிபுரம், நவ.2:
காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா சனிக்கிழமை லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். வரலாற்றுச் சிறப்புகள் பல உடைய இக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழாவும் அதன் நிறைவு நாளன்று சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெறுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதால் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறாது என கோயில் செயல் அலுவலர் பெ.கதிரவன் தெரிவித்துள்ளார்.
சஷ்டி என்றால் ஆறு எனவும் பொருளாகும். ஐப்பசி மாதம் சுக்கில பட்ச பிரதமை திதியிலிருந்து சஷ்டி திதி வரை உள்ள 6 நாட்கள் கந்தசஷ்டி விழா நாட்களாகும்.முருக பக்தர்கள் பலரும் இந்த 6 நாட்களும் கந்தசஷ்டி விரதம் இருப்பார்கள்.
நிகழாண்டுக்கான கந்தசஷ்டித் திருவிழா சனிக்கிழமை 2 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 6 நாட்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்வாக வள்ளி,தெய்வானையுடன் சண்முகப் பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் லட்சார்ச்சனையும் நடைபெற்றது.
கந்தசஷ்டி விழா நடைபெறும் 6 நாட்களும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏராளமானோர் ஆலயத்தை பக்தியுடன் 108 முறை வலம் வந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும், வரிசையாக வந்து சுவாமி தரிசனம் செய்யவும் கோயில் செயல் அலுவலர் பெ.கதிரவன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.