காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு திருவிழாவையொட்டி சனிக்கிழமை திருச்செங்காட்டங்குடி சிவபெருமான் வடிவில் சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி முடவன் முழுக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு கார்த்திகை மாத முதல் தேதியையொட்டி பாலாற்றில் திருச்செங்காட்டங்குடி சிவபெருமானைப் போன்ற வடிவில் சோமாஸ்கந்தரும் அவருக்கு நேர் எதிரே பைரவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மேலும் விநாயகர், முருகன், நரசிம்ம வர்ம பல்லவ மன்னன், சண்டிகேசுவரர் ஆகிய தெய்வங்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சோமாஸ் கந்தர் அலங்காரத்துக்கு கீழே மணல்லிங்கம் வடிவமைக்கப்பட்டு தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது.
விழாவில் மேல்மருவத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் சக்தி.பு.கந்தன் பிள்ளைக்கறி அமுது படைத்த சிறுத்தொண்டநாயனார் கதையை பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.
பின்னர் சோமாஸ்கந்தர் சிறுத்தொண்ட நாயனாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கார தீபாராதனைகளை காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் பூஜகர் இ.ரவிச்சந்திர குருக்கள் நடத்தினார்.
சிவபெருமான் மனக்குறையையும்,ஊனக்குறைபாட்டையும் நீக்கியதால் முடவன் முழுக்கு விழா ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி காஞ்சிபுரத்தில் பாலாற்றில் கொண்டாடப்பட்டு வருகிறது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முடவன் முழுக்கு திருவிழாவையொட்டி காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் பாலாற்றுப் பகுதியில் மணலால் லிங்கம் வடிவமைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்படடனர். சிவ பூஜைக்குப் பின்னர் விழாவைக் காண வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்கள்.