காஞ்சிபுரம், நவ.3:
காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால்க்குடம் எடுத்துக்கொண்டு ராஜவீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.
காஞ்சிபுரம் நெமந்தகாரத் தெருவில் உள்ளது பழனி ஆண்டவர் திருக்கோயில்.இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவம்பர் முதல் தேதி விநாயகருக்கு அபிஷேகமும், மாலையில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவுடனும் தொடங்கியது. மறுநாள் காப்புக்கட்டுதல் உற்சவம் நடைபெற்றது.
3 ஆம் தேதி காஞ்சிபுரம் அமரேசுவரர் ஆலயத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்க்குடம் எடுத்துக் கொண்டு ராஜவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் சேர்ந்ததும் பாலாபிஷேகம் நடைபெற்றது.
ஊர்வலத்தின் போது சுரேஷ் என்ற பக்தர் 108 வேல் தரித்து பங்கேற்றார்.இரவு முருகப்பெருமான் சிங்க முகாசூரானை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக வரும் 6 ஆம் தேதி சூரபத்மன் தனது பூத சேனைகளுடன் திக்விஜயம் செய்தல் நிகழ்வும், மறுநாள் 7 ஆம் தேதி காஞ்சிபுரம் அரச காத்த அம்மன் ஆலயத்தில் சக்தியிடம் வேல் பெறுதல் நிகழ்வும் நடைபெறுகிறது. அன்று இரவு வீரவாகு தூதும், சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.
வரும் 8 ஆம் தேதி தெய்வானை திருக்கல்யாணமும் ,9 ஆம் தேதி மாலையில் ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நெமந்தகாரத் தெரு, உபதலைவர் பரமசிவம் தெரு,கற்பக பிள்ளையார் கோயில் தெரு, இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு, நெமந்தகார ஒற்றைவாடைத் தெரு ஆகிய தெருக்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.