Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் முருகன் கோயில்களில் வீரவாகு தூதும், சூரசம்ஹாரம் நடைபெறுகிறது


காஞ்சிபுரம், நவ.5:


காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டித் திருவிழாவையொட்டி  7 ஆம் தேதி மாலை வீரவாகு தூது செல்லுதலும் சூரசம்ஹார வதமும் நடைபெறுகிறது. 


காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நவ.2 ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்புக்கட்டுதல் உற்சவத்துடன் விழா தொடங்கியது.  7 ஆம் தேதி வியாழக்கிழமை வீரவாகு தூதும் சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.


காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெறுவதால் சூரசம்ஹாரம் நடைபெறாது என கோயில் செயல் அலுவலர் பொ.கதிரவன் தெரிவித்துள்ளார்.


விழா நடைபெறும் 6 நாட்களும் மூலவருக்கும், சண்முகருக்கும் தினசரி சிறப்பு அபிஷேகமும்,லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 4வது நாளாக செவ்வாய்க் கிழமை சண்முகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திம்மராஜம்பேட்டை ராமலிங்கேசுவரர் கோயில் ஆகியனவற்றில் 7 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 8 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.


காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் திருக்கோயில் 7 ஆம் தேதி காலையில் அரச காத்த அம்மன் ஆலயத்தில் சக்திவேல் பெறுதல் நிகழ்வும்,சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.  8 ஆம் தேதி திருக்கல்யாணமும் மறுநாள் 9 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது. 


காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பணாமுடீஸ்வரர் கோயிலில் உள்ள முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி திருவிழா 2 ஆம் தேதி தொடங்கியது. 


கோயில் செயல் அலுவலர் எஸ்.நடாரஜன், அறங்காவலர் குழுவின் தலைவர் கே.சண்முகம் ஆகியோர் தலைமையில்   வியாழக்கிழமை சூரசம்ஹாரமும் அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவாளர் தாமல் விஜயராகனின் கந்தபுராண சொற்பொழிவும் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.