காஞ்சிபுரம், ஜன.15:
பொங்கல் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி வைரவேலுடன் வெள்ளித்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகப்பெருமான் தமிழ்ப்புலவராக வந்து புலவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆகிய இரு பண்டிகை தினங்களில் மட்டும் முருகப்பெருமான் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டு பொங்கல் பண்டியையொட்டி வள்ளி,தெய்வான சமேதராக உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வெள்ளித்தேரில் வைரவேலுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெள்ளித்தேர் பவனியின் போது ஏராளமானோர் சிவ வாத்தியங்கள் இசைக்க, முருக பக்தர்கள் பலரும் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆலயத்தின் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் செய்தார்.
ஏற்பாடுகளை ஆலயத்தின் செயல் அலுவலர் கதிரவன் தலைமையில் கோயில் சிவாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.