காஞ்சிபுரம், பிப்.26:
காஞ்சிபுரம் மாநகராட்சி பெரியகாஞ்சிபுரம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிவராத்திரியையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் உற்சவர் சுவாமி கைலாசநாதரும், பர்வத வர்த்தினி அம்மனும் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரவு நான்கு கால சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் ஆலயத்தின் முன்பாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரி விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் அமைந்துள்ள அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி மாலையில் திரளான பக்தர்கள் பால்க்குடம் எடுத்து வந்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், திருநீலகண்ட நாயனாருக்கு முக்தி அளித்த முத்தீஸ்வரர் கோயில், பெருமாள் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்ட பெருமைக்குரிய கச்சபேசுவரர் கோயில், களக்காட்டூர் அக்னீஸ்வரர் மற்றும் சுரகேசுவரர், வழக்கறுத்தீசுவர், வளத்தீசுவரர் உட்பட காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களிலும் இரவு முழுவதும் 4 கால அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்திக் குளக்கரையை சுற்றியுள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றது.