காஞ்சிபுரம், ஜூலை 14:
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் திருப்பணி மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூலை 9ம் தேதி கிராம தேவதையான ஏகாத்தம்மனுக்கு பொங்கல் விழா நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின.
இந்நிலையில், ஜூலை 14ம் தேதி திங்கள்கிழமை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூரணாகுதி தீபாராதனைகள் விமரிசையாக நடைபெற்றன. பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர் குடங்கள், மங்கள இசைக்குழுவுடன் ராஜகோபுரத்திற்கேற்று செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மூலவர்களான கைலாசநாதர், தெட்சிணாமூர்த்தி மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை நேரத்தில் கைலாசநாதருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் திருக்கல்யாண விழா மற்றும் மணக்கோல வீதியுலா நடைபெற்றது. இதில் கோவிந்தவாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் கதிரவன் தலைமையில் ஆலய பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.