காஞ்சிபுரம், ஆக.3:
ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சகங்கா திருக்குளத்தில் புனித நீர்க்கலசம் வைக்கப்பட்டு அதற்கு பட்டுச்சேலை உடுத்தி, மலர்மாலைகள் அணிவித்து, வேதமந்திரங்கள் ஜெபித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் கோயில் திருக்குளத்தில் மஞ்சள்,குங்குமம்,மலர்கள் ஆகியனவும் தூவி சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கல மேள வாத்தியங்கள் முழங்க புனித நீர் கலசம் கோயில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் புனித நீர் தெளித்து ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது.
கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா திருக்குளத்திலும்,சங்கர மடத்திலும் நடைபெற்ற நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.