காஞ்சிபுரம், ஜூலை 31:
வைணவத் திருக்கோயில்கள் 108-ல் ஒன்றாகவும், காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் உள்ள ஓரே கோயில் என்ற பெருமைகளுக்கும் உரியது அஷ்டபுஜப் பெருமாள் கோயில்.
இக்கோயில் அருகில் உள்ள கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் திருக்குளம் பல ஆண்டுகளாக பாசி படிந்து, தண்ணீர் பச்சை நிறமாகி, செடி, கொடிகள், புதர்கள் ஆகியன அதிகமாகி குளம் சீரழிந்து இருந்தது.
இக்குளம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு உபயதாரர்களின் உதவியால் ரூ.22 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் படிகளும் சீரமைக்கப்பட்டது. குளத்தில் 7 அடி ஆழத்திற்கு தூர்வாரப்பட்டும் செப்பனிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆடி மாத ஹஸ்த நட்சத்திரத்தையொட்டி உற்சவர் அஷ்டபுஜப் பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகி கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் கோயில் திருக்குளத்தில் கஜேந்திர மோட்ச உற்சவம் நடைபெற்றது.
கோயில் குளத்தில் விஷ்ணு, முதலை, யானை உருவங்களும் தத்ரூபமாக கஜேந்திர மோட்சத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
50 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விழா மீண்டும் நடைபெற, பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோயில் அறங்காவலர் எஸ்.கே.பி சந்தோஷ் குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம் தலைமையில் கோயில் பட்டாச்சாரியர்கள் மற்றும் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.