காஞ்சிபுரம், ஆக.10:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாக இருந்து வந்தவர் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 91 வது ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுவாசினிகள் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு பல்வேறு வகையான மலர் மாலைகள் அணிவித்தும் வழிபட்டனர்.ஸ்ரீ மடத்தின் வளாகத்தில் வேத விற்பன்னர்களால் ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் நடத்தப்பட்டு புனிதநீர் கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரு மகான்களின் அதிஷ்டானங்களுக்கும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகா பெரியவர் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி சார்பில் கச்சபேசுவரர் ஆலயம் முன்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,நிர்வாகி கீர்த்தி வாசன் ஆகியோர் செய்திருந்தனர். இரவு தங்கத்தேரில் ஜெயேந்திரர் உருவச்சிலை வைக்கப்பட்டு வீதியுலா வந்தது.