காஞ்சிபுரம், அக்.22:
முருகப்பெருமான் தமிழ்ப்புலவராக வந்து புலவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.இக்கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நிகழாண்டு முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி காலையிலும்,மாலையிலும் மூலவருக்கும்,உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனைகளும் நடைபெறுகிறது. தினசரி உற்சவர் சண்முகப்பெருமான் வண்ணமலர் அலங்காரத்தில் விழா நடைபெறும் 6 நாட்களும் அருள்பாலிக்கவுள்ளார்.முதல் நாளான புதன்கிழமை மஞ்சள் நிற உடை மற்றும் மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியகாஞ்சிபுரம் நெமந்தக்காரத் தெருவில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயிலில் புதன்கிழமை வீரவாகு காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் கந்தசஷ்டித் திருவிழா தொடங்கியது.பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.மாலையில் முருகப்பெருமான் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழா நடைபெறும் 6 நாட்களும் முருகப்பெருமான் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளார். வரும் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெமந்தக்காரத்தெரு ஒத்தவாடைத் தெருவில் அமைந்துள்ள அமரேஸ்வரர் ஆலயத்திலிருந்து 108 பக்தர்கள் வேல் தரித்தல் மற்றும் 108 பேர் பால்க்குடம் எடுத்தல் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இரவு முருகப்பெருமான் தனது சேனைகளுடன் திக்விஜயம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக வரும் 27 ஆம் தேதி ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் அமைந்துள்ள அரசகாத்த அம்மன் ஆலயத்தில் அம்மனிடம் வேல்வாங்கும் நிகழ்ச்சியும்,ஆறுமுகப்பெருமான் வீதியுலா வந்து சூரனை வதம் செய்யும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
வரும் 28-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்,வரும் 29 ஆம் தேதி முருகப் பெருமான் ஊஞ்சல் சேவையுடனும் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.