காஞ்சிபுரம், அக்.3:
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் மாதம் தோறும் வரும் ஏகாதசியின் போது ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அலங்காரமாகி சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி வரை வந்து மீண்டும் ஆலயம் திரும்புவது வழக்கம்.
இதே போல ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பெருந்தேவித் தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதும் வழக்கம். ஒரே நேரத்தில் ஏகாதசியும்,சுக்ர வாரமும் ஒன்றாக இணைந்து வந்ததால் பெருமாளும்,தாயாரும் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருக்கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து உற்சவர் வரதராஜசுவாமி அலங்காரமாகி வழக்கம் போல ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்று திரும்பி வந்து ஆலய நுழைவுவாயிலில் பெருந்தேவித்தாயாருடன் இணைந்து இருவருமாக ஆலய வளாகத்தில் உள்ள தோட்டத்திற்கு எழுந்தருளினர்.அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் இருவரும் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்து அவரவர் சந்நிதிகளுக்கு எழுந்தருளினார்கள்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும்,தாயாரையும் தரிசித்தனர்.