காஞ்சிபுரம், அக்.8:
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு வீதியில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் ஸ்ரீருத்ர பசுபதி நாயனார் குருபூஜை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் குலால மரபினர் தர்ம பரிபாலனம், காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம்,சரஸ்வதி ஜவுளி நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து குருபூஜையை நடத்தினார்கள்.
குருபூஜையை யொட்டி ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள கேதாரகௌரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெங்களூர்,சென்னை,வேலூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் மொத்தம் 121 முறை ருத்ரபாராயணம் உலக நன்மைக்காக நடைபெற்றது.
ஜிஆர்டி ஐயர்கள் குருகுல அமைப்பின் காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளர் ஆற்காடு முத்துக்குமார் ஐயர் வேதபாராயணத்தை தொடக்கி வைத்தார்.
ருத்ர பாராயண நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சிவனடியார் திருக்கூட்டத்தின் தலைவர் பூவேந்தன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.