காஞ்சிபுரம் | ஜனவரி 3, 2026
மார்கழி மாத ஆருத்ரா மகோற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அன்னை காமாட்சி அம்மன் மற்றும் நடராஜர் - சிவகாமி அம்மன் எழுந்தருளிய வைபவம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
அன்னை காமாட்சி எழுந்தருளல்:
மகா சக்தி பீடமான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து, ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ராஜவீதிகள் வழியாக வீதியுலா வந்தார். காஞ்சி சங்கர மடத்தின் நுழைவு வாயிலுக்கு அன்னை எழுந்தருளியபோது, மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மந்திர புஷ்பாஞ்சலி செய்து, மகா தீபாராதனைகள் காட்டி அம்பிகையை வழிபட்டார்.
சந்திர மௌலீசுவரருக்குப் பாலாபிஷேகம்:
முன்னதாக, சங்கர மடத்தில் எழுந்தருளியுள்ள சந்திர மௌலீசுவரருக்கு அதிகாலையிலேயே ஏகாதச ருத்ர மந்திரங்கள் முழங்கச் சிறப்புப் பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் பீடாதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நடராஜர் - சிவகாமி அம்மன் தரிசனம்:
அதேபோல், ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் இருந்து நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சங்கர மடத்திற்கு எழுந்தருளினர். சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்வின் போது சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், செயலாளர் சல்லா. விஸ்வநாத சாஸ்திரி, நிர்வாகிகள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.png)