காஞ்சிபுரம் | ஜனவரி 6, 2026
ராமேசுவரத்தில் உள்ள சங்கர மடத்தில் வைத்து வழிபாடு செய்வதற்காக, சுவாமிமலையில் நேர்த்தியாகச் செய்யப்பட்ட காஞ்சி மகாபெரியவரின் ஐம்பொன் சிலை, காஞ்சி பீடாதிபதிகளின் ஆசியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது.
சுவாமிமலையில் உருவான ஐம்பொன் சிலை:
ராமேசுவரத்தில் செயல்பட்டு வரும் 'அனுஷம் நட்சத்திர வழிபாட்டுக் குழுவினர்', தங்கள் வழிபாட்டுத் தேவைக்காக மகாபெரியவரின் திருவுருவச் சிலையைச் செய்யத் திட்டமிட்டனர். இதற்காகக் காஞ்சி பீடாதிபதிகளிடம் அனுமதி பெற்று, உலகப் புகழ்பெற்ற சுவாமிமலையில் 1.75 அடி உயரமும், 3.75 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட ஐம்பொன் சிலையை உருவாக்கினர்.
பீடாதிபதிகள் ஆசி:
இந்தச் சிலையினை வழிபாட்டுக் குழுவின் தலைவர் ஜி.வி.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம் சிலையைக் காண்பித்து ஆசி பெற்றனர்.
வழிகாட்டுதல்:
சிலையைப் பார்வையிட்ட பீடாதிபதிகள், ராமேசுவரத்தில் விழாக்களை எவ்விதம் நடத்த வேண்டும், மகாபெரியவர் காட்டிய வழியில் வழிபாடுகளை எவ்விதம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து, அந்த ஐம்பொன் சிலை மங்கல வாத்தியங்கள் முழங்க ராமேசுவரத்திற்குப் புறப்பட்டது.
இந்நிகழ்வில் ராமேசுவரம் சங்கர மட மேலாளர் ஆடிட்டர் சுந்தர், உறுப்பினர் சுந்தரவாத்தியார் உள்ளிட்ட வழிபாட்டுக் குழுவினர் உடனிருந்தனர். கடந்த 6 மாதங்களாக மகாபெரியவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு நடத்தி வந்த இந்தக் குழுவினருக்கு, இனி ஐம்பொன் சிலையாக மகாபெரியவர் காட்சியளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
.png)