Type Here to Get Search Results !

திருமணம் செய்ய எத்தனை பொருத்தங்கள் அவசியம் ?

 திருமணம் செய்ய
எத்தனை பொருத்தங்கள் அவசியம் ?

நான் சொல்லபோகும் குறிப்புகளும், விளக்கங்களும் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் எடுத்துக்கொள்ளுங்கள் படித்துவிட்டு இதையே பின்பற்றுங்கள். திருமணத்தை முடிவு செய்யுங்கள் குழப்பங்கள் வேண்டாம். ஒருவரது வாழ்க்கையில் அவரது திருமணம் தான் ஒரு திருப்புமுனையை ஏற்ப்படுத்துகிறது. ஆனால் இத்திருமணம் எளிதில் எல்லோருக்கும் நடக்ககூடிய ஒன்றன்று. கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார் என்கிற பழமொழி இதனை உண்மையாக்குகின்றது. சிலருக்கு இளமைகடந்தும், சிலருக்கு வயது கடந்தும் இன்னும் சிலருக்கு நடக்காமலேயே கூட போய்விடுகிறது. ஆயிரங்காலத்துப்பயிர் என போற்றப்படும் இந்த திருமணம் நல்ல முறையில் சாஸ்த்திர சம்பர்தாயத்தோடு செய்து முடித்தால் தான் மணமக்கள் சிறப்போடு பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்வார்கள் என்பது உண்மை அல்லவா?
    1.நட்சத்திர பொருத்தம் என்கிற தினப்பொருத்தம்
திருமணப்பொருத்தம் பார்த்தல் என்பது பிறந்த நட்சத்திரப்படிப்பெயர் வைத்தவர்கள் பார்க்க கூடிய ஒன்றாகும். நட்சத்திரப்படி பெயர் வைக்காதவர்களுக்கு இப்பொருத்தம் சரியாக அமையாது. முறையாகப் பிறந்த நட்சத்திரத்தையும், பிறந்த இராசியையும் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் பொருத்தம் பார்க்க பெண்ணின் நட்சத்திரத்தையே முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இருவருக்கும் பிறந்த நட்சத்திரம் இராசி ஒன்றானால் அது ரோகிணி, அஸ்தம், திருவோணம், மகம், விசாகம், உத்திராடம், திருவாதிரை, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருத்தம் உள்ளவையாகும். மற்ற 19 நட்சத்திரங்களும் சாதாரணப்பொருத்தம் உள்ளவைகள்தான். ஒரே இராசி, ஒரே நட்சத்திரம் வரலாம் ஆனால் ஒரே பாதம் வரக்கூடாது அது நலம் தருவதில்லை.
    2.கணப்பொருத்தம்
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆண் பிறந்த நட்சத்திரம் வரை எண்ணி கண்ட தொகை 13க்கு மேல் வந்தால் கணப்பொருத்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இப்பொருத்தம் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.
    3.மகேந்திரப் பொருத்தம்
நட்சத்திரம், கணம், மகேந்திரம் ஆகிய ஏதாவது ஒரு பொருத்தம் இருந்தாலே போதுமானது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் 4,7,10,13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு. இப்பொருத்தம் வந்தால் குழந்தை செல்வம், ஆயுள் விருத்தி உண்டு.
    4.ஸ்திரி தீர்க்கம்
இப்பொருத்தம் வந்தால் செல்வ சிறப்பை தரும். பெண்ணின் பிறந்த நட்சத்திரத்திற்கு ஆணின் நட்சத்திரம் 9க்கு மேல் வந்தால் இப்பொருத்தம் உண்டு. 7 வந்தாலும் பரவாயில்லை.
    5.யோனி பொருத்தம்
இப்பொருத்தம் இல்லையெனில் கணவன் மனைவிக்குள் ஒயாத சண்டை சச்சரவுகள் வரும். இப்பொருத்தம் விலங்கின வகையால் அறியப்படுகிறது. பகையில்லாமல் பையனுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் வந்தால் பொருத்தம் உண்டு. மாறி இருந்தாலும் பகையில்லாமல் வரவேண்டும். தவிர்க்க கூடியவை பசு-புலி
யானை-சிங்கம்
குதிரை-எருமை
நாய்-முயல்
பாம்பு-கீரி
குரங்கு-ஆடு
பூனை-எலி ஆகியவையாகும். இப்பொருத்தம் இருந்தால் உடல் உறவில் தம்பதியருக்கு மகிழ்ச்சியையும் இன்பநிலையும் கடைசிவரை மாறாமல் இருப்பார்கள். மற்றப்பொருத்தங்கள்...
    6.இராசிப்பொருத்தம்
இருவருக்கும் ஒரே இராசியாக இருந்தாலும் பெண் இராசிக்கு ஆண்ராசி ஆறுக்கு மேல் இருந்தாலும் நல்லது. பெண்ராசிக்கு ஆண்ராசி 3,4ம் இராசி வந்தால் பரவாயில்லை. 2,5,6 சரியில்லை. 6,8 ஆனால் அடிக்கடிசண்டை, குடும்பத்தில் கலக்கம், பிறர் சொற் கேட்டதால் பிரச்சனை, போன்றவை இருக்கும். இராசி அதிபதிகள் நட்பானால் நல்ல பலன் ஏற்ப்படும். இராசிப்பொருத்தத்தில் கடகராசிக்கு மகரமும், சிம்மராசிக்கு கும்பராசியும் சேர்க்ககூடாது. கார்த்திகை-ஆயில்யம் கண்டிப்பாக சேர்க்ககூடாது. மேலும் சேர்க்ககூடாத இராசிகள் அவை, மேஷம்-கன்னி
ரிஷபம்-தனுசு
மிதுனம்-விருட்சிகம்
கடகம்-கும்பம்
சிம்மம்-மகரம்
துலாம்-மீனம்
கடகம்-விருட்சிகம்
கன்னி-மகரம்
கும்பம்-மிதுனம்
மீனம்-கடகம்
மேஷம்-ரிஷபம்
மிதுனம்-கடகம்
துலாம்-விருட்சிகம்
மகரம்-தனுசு
கும்பம்-மீனம்
ஆகிய இராசிகளின் சேர்க்கை கூடாது. மற்ற இராசிகளின் இணைவு நட்பாக வருவதால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    7.இராசியதிபதிப் பொருத்தம்
இருவர் ஜாதகங்களிலும் சந்திரன் நின்ற வீடுதான் அவரவர் இராசி ஆகும். அந்த வீட்டின் அதிபதிகள் நட்பு அல்லது சமமானால் நல்ல பொருத்தமாகும். இப்பொருத்தம் வந்தால் சந்தான விருத்தியும், மன ஒற்றுமையும் தரும். சூரியனுக்கு நட்பு : சந்திரன், செவ்வாய், குரு, சமம் : புதன்
சந்திரனுக்கு நட்பு : சூரியன், புதன் சமம் : செவ்வாய், குரு, சுக்ரின், சனி
செவ்வாய்க்கு நட்பு : சூரியன், சந்திரன், குரு, சமம் : சுக்ரன், சனி
புதனுக்கு நட்பு : சூரியன், சுக்ரன், சமம் : செவ்வாய், குரு, சனி
குருவுக்கு நட்பு : சூரியன், சந்திரன், செவ்வாய், சமம் : சனி
சுக்ரனுக்கு நட்பு : புதன், சனி சமம் : செவ்வாய், குரு
சனிக்கு நட்பு : புதன், சுக்ரன் சமம் : குரு
    8.வசியப் பொருத்தம்
பெண் இராசிக்கு ஆண்ராசி வசியமானால் நல்லது. ஆண் இராசிக்குப் பெண்ராசி வசியமானாலும் பரவாயில்லை வசியமில்லையெனில் பொருந்தாது. இப்பொருத்தம் இருந்தால் கவர்ச்சியும், வம்சவிருத்தியையும் குறிக்கும். மணமக்களின் வசிய இராசிகள் அவை,
மேஷம்-சிம்மம்,விருச்சிகம்
ரிஷபம்-கடகம்,துலாம்
மிதுனம்-கன்னி
கடகம்-விருச்சிகம்,தனுசு
சிம்மம்-துலாம்
கன்னி-மீனம்,மிதுனம்
துலாம்-மகரம்,கன்னி
விருச்சிகம்-கடகம்
தனசு-மீனம்
மகரம்-மேஷம்,கும்பம்
மீனம்-மகரம்
    9.இரச்சுப் பொருத்தம்
பாதம், தொடை, வயிறு, கழுத்து, தலை எனும் உறுப்புகள் நட்சத்திரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்குத்தான் இரச்சு என்றுப்பெயர். இது இருவருக்கும் ஒரே இரச்சுவாக வர கூடாது. அப்படி வந்தால் இரண்டும் ஆரோகணத்தில் இருப்பது நல்லது அல்லது இருவருக்கும் ஒரே இரச்சுவாக வந்தாலும் ஒருவரின் ஜென்மநட்சத்திரம் ஆரோகணத்திலும், இன்னொருவரின் நட்சத்திரம் அவரோகணத்திலும் இருந்தாலும் இரச்சு உண்டு. மற்றபடி எப்படி வந்தாலும் இரச்சுப்பொருத்தம் இல்லை. இபபொருத்தம் வந்தால் தான்[கயிற்றுப்பொருத்தம்] திருமணம் செய்ய வேண்டும்.
ஆரோகணம்(ஏறுமுகம்) மிருகசீரிஷம், ரோகிணி, கார்த்திகை, பரணி, அஸ்வினி, சித்திரை, அஸ்தம், உத்திரம், பூரம், மகம், அவிட்டம், திருவோணம், உத்திராடம், பூராடம், மூலம்.
அவரோகணம்(இறங்குமுகம்) திருவாதிரை புனர்பூசம், பூசம், ஆயில்யம், சுவாதி விசாகம், அனுஷம், கோட்டை, சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி போன்றவைகளாகும்.
    10.வேதைப் பொருத்தம்
ஒவ்வொரு நட்சத்திரமும் வேறொன்றைபாதிக்கும் இப்படிப்பட்ட பாதிப்பு நட்சத்திரங்கள் உள்ள மணமக்களின் ஜாதகங்கள் பொருந்தாது. வேதை என்றால் பகை என்று பொருள், வேதை நட்சத்திரங்கள் 1.அசுவிணிக்கு-கோட்டை
2.பரணி-அனுஷம்
3.கார்த்திகை-விசாகம்
4.ரோகிணி-ஸ்வாதி
5.மிருகசீரிஷம்-சித்திரைஅவிட்டம்
6.திருவாதிரை-திருவோணம்
7.புனர்பூசம்-உத்திராடம்
8.பூசம்-பூராடம்
9.ஆயில்யம்-மூலம்
10.மகம்-ரேவதி
11.பூரம்-உத்திரட்டாதி
12.உத்திரம்-பூரட்டரதி
13.அஸ்தம்-சதயம் ஆகும். இப்பொருத்தம் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை, புத்ர சம்பத்து உண்டு.
    11.நாடிப் பொருத்தம்
இருவருக்கும் ஒரே நாடியாக வந்தால் பொருத்தம் இல்லை. மாறி வந்தால் பொருத்தம் உண்டு. 1.அசுவினி-வாதம்
2.பரணி-பித்தம்
3.கார்த்திகை-சிலேத்துமம்
4.ரோகிணி-சிலேத்துமம்
5.மிருகசீரிஷம்-பித்தம்
6.திருவாதிரை-வாதம்
7.புனர்பூ-சம்வாதம்
8.பூசம்-பித்தம்
9.ஆயில்யம்-சிலேத்துமம்
10.மகம்-சிலேத்துமம்
11.பூரம்-பித்தம்
12.உத்திரம்-வாதம்
13.அஸ்தம்-வாதம்
14.சித்திரை-பித்தம்
15.ஸ்வாதி-சிலேத்துமம்
16.விசாகம்-சிலேத்துமம்
17.அனுஷம்-பித்தம்
18.கோட்டை-வாதம்
19.மூலம்-வாதம்
20.பூராடம்-பித்தம்
21.உத்திராடம்-சிலேத்துமம்
22.திருவோணம்-சிலேத்துமம்
23.அவிட்டம்-பித்தம்
24.சதயம்-வாதம்
25.புரட்டாதி-வாதம்
26.உத்திரட்டாதி-பித்தம்
27.ரேவதி-சிலேத்துமம்

இந்த பொருத்தங்களில் தினம், கணம், யோனி, இராசி, இரச்சு இருந்தாலே போதுமானது. இப்பொருத்தங்களுடன் இருவரின் ஜாதகப் பலன்களையும் பார்த்தே மணம் செய்விக்க வேண்டும். பார்க்ககூடியவைகள், இருவரின் தசாபலன்கள், ஆயுள், தோஷங்கள், தம்பதிகளின் ஒற்றுமைநிலை, சந்தான பாக்யம், அதிர்ஷ்ட யோகங்கள், 2,4,7,8,12 ஆகிய இடங்களில் பாபிகள் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இருவருக்கும் இருக்க வேண்டும் மற்றும் 7ம் வீட்டில் தீய கோள்கள் இருந்தாலும் (அ) 7ம் அதிபதி 3,8,12ல் இருந்தாலும் எளிதில் திருமணம் நடப்பதில்லை. அப்படி நடந்தாலும் போராட்டமான வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இது போன்ற விதிமுறைகளையும், ஜாதகப்பலன்களையும் பார்க்கும் போது கருத்தில் கொள்ளவேண்டும். பொருத்தம் ஜாதகபலன் போன்றவற்றை பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட பலர் துன்பபடுவதை கண்கூடாக பார்கிறோம். பொருத்தமற்ற திருமணங்கள் கூட பொருத்தமான திருமணங்கள் என நம்பவைக்கப்பட்டு நடத்தப்படுவதால் பொருத்தம் பார்த்து செய்யும் மணங்கள்கூட தோல்வியை தழுவுகின்றது. ஆகவே நல்ல ஞானமும் வாக்குபலிதம் உள்ள ஜோதிடரை அணுகுங்கள் ஆராய்ந்து திருமணத்தை முடிவு செய்யுங்கள். சிறப்பான திருமணம் செய்தோம் என திருப்தி ஏற்ப்படும் அல்லவா?