Type Here to Get Search Results !

இன்று கூடாரவல்லி... பாவை நோன்பு.... மானுடப் பெண், மாதவனை மணாளனாகப் பெற்ற மகத்தான நாள்!

பாவை நோன்பிருந்து திருமாலை வழிபட்ட ஆண்டாள் நாச்சியார், திருமாலின் திருவடியை அடைதைந்த மோட்ச வைபவ நாளே கூடாரவல்லி என்ற பெயரில் ஆண்டுதோறும் மார்கழியின் 27 வது நாளில் கொண்டாடப்படுகிறது. 

2023 ம் ஆண்டு பஞ்சாங்கத்தின் படி கூடாரவல்லி வைபவம் ஜனவரி 11 ம் தேதி (இன்று). மார்கழியின் 27 வது நாளிலேயே கூடாரவல்லி அனுஷ்டிக்கப்படுகிறது.  இந்த நாளில் அக்காரஅடிசல் செய்து கிருஷ்ணருக்கு படைப்பது வழக்கம். அனைத்து வைணவ தலங்களிலும் இவ்விழா சிறப்பாகக் இன்று கொண்டாடப்படும்.



கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.




பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். பக்தர்களை ரட்சிக்கும் அந்த பரந்தாமன், தீந்தமிழால் தன்னை பூஜிக்கும் கோதைப்பிராட்டியை கைவிடுவானா? மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்




"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"

என்று பாடி பரவசம் கொள்கிறாள். 


அதுமட்டுமா? கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். 

இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். எத்தனை மகத்தான பொன்னாள் இந்த கூடாரவல்லி நாள். மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ இன்று (11-01-2023).  

கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.


மார்கழியில் பாவை நோன்பிருந்து வழிபட்டால் திருமாலின் திருவருளை பெற முடியும். வளமான வாழ்க்கை அமையும் என திருப்பாவை பாசுரங்களில் வழிகாட்டுகிறார் ஆண்டாள். மார்கழி மாதத்தின் இறுதியில் பாவை நோன்பினை நிறைவு செய்யும் நாளை கூடாரவல்லி தினம் என்கிறோம்.


மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று கூடாரவல்லி. மார்கழி மாதத்தில் பெருமாளின் அருளை பெறுவதற்காக இருக்கப்படுவது பாவை நோன்பு ஆகும். மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபட்டால் நல்ல வரன் அமையும். சிறப்பான வாழ்க்கை அமைவதுடன், குடும்பம் செழிக்கும் என்பது நம்பிக்கை.


மார்கழி மாதத்தில் அதிகாலையில் அனைத்து வைணவ தலங்களிலும் வழக்கமான சுப்ரபாதத்திற்கு பதிலாக, ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல்களே இசைப்படுகின்றன. அதோடு திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற முக்கிய தலங்களில் வைகுண்ட ஏகாதசி முந்தைய பத்து நாட்கள் பகல் பத்து என்றும், பின் பத்து நாட்களம் இரா பத்து என்றும் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் பன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யபிரபந்தம் பாசுர பாரயணம் நடத்தப்படுகிறது.



திருமாலின் அருளை பெறுவதற்காகவும், திருமாலின் திருவடியாக வைகுண்ட பதவியை அடைவதற்கும் வழி செய்யும் பாவை நோன்பின் நிறைவு நாளையே கூடாரவல்லி என போற்றுகின்றோம். இதன் சிறப்பையே திருப்பாவையின் 27 வது பாசுரத்தில், கூடாரவல்லி வெல்லும் சீர் கோவிந்தா என ஆண்டாள் குறிப்பிடுகிறார். இந்த நாளிலில் பல வகையான இனிப்புக்கள் செய்து திருமாலுக்கு படைப்பது வழக்கம்.


​வழிபடும் முறை :

கூடாரவல்லி, அதாவது பாவை நோன்பின் இறுதி நாளில் பெண்கள் அழகிய உடைகள் உடுத்தி, தங்களை மலர்கள், அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்வார்கள். பால், இனிப்பு, அரிசி சேர்த்து பொங்கல் வைத்து திருமானுக்கு படைப்பார்கள். இந்த நாளில் பாவை நோன்பு இருந்த பெண்கள் அளிக்கும் இனிப்புக்களை உண்டு, அவர்களது வாழ்வு சிறப்பாக அமைய ஸ்ரீ கிருஷ்ணர் ஆசிர்வதிப்பார் என்பது ஐதீகம்.



என்ன பலன் கிடைக்கும்

கூடாரவல்லி நாளில் சர்க்கரை பொங்கல் செய்து வழிபட்டால் திருமாலின் அருளையும், ஆண்டாளின் அருளையும் நாம் பெற முடியும். இந்த நாளில் ஆண்டாள் நாச்சியாரை வழிபட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேருவார்கள். ஆண்டாளின் கிளி எப்படி ரங்கமன்னாரிடம் தூதாக சென்றதோ அதே போல் ஆண்டாள் நமக்காக தூதாக சென்று கன்னிப் பெண்களுக்கு மனத்திற்கு பிடித்த வரன் அமையவும், திருமணமான பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை சிறக்கவும் அருள் செய்ய சொல்லி ரங்கநாதரிடம் சிபாரிசு செய்வார் என்பது நம்பிக்கை.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.