Type Here to Get Search Results !

திருமண தடை ஏற்படுத்தும் களத்திர தோஷம்... பரிகாரம்...

ஆணோ பெண்ணோ திருமணம் ஒருவரின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது.  பொதுவாக ஆணுக்கு 25 வயதுக்குள்ளும், பெண்ணுக்கு 23 வயதுக்குள்ளும் திருமணம் நடைபெறுவது நல்லது. ஆனால், எல்லோருக்கும் அப்படி நடந்துவிடுவதில்லை...  சிலருக்கு மட்டுமே கொடுப்பினை...


பொருளாதாரச் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அதேநேரம், வசதி வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் சிலருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறுவதில்லை. 

ஜோதிட ரீதியாகப் பார்த்தால், ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். களத்திர தோஷம், பாப கர்த்தாரி தோஷம், சுக்கிர தோஷம், சூரிய தோஷம், செவ்வாய் தோஷம், பித்ரு என எண்ணற்ற தோஷங்கள் திருமண தடையை ஏற்படுத்துகின்றன.

நம்முடைய ஜாதகத்தில் என்னென்ன தோஷம் இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய அவசரப்படக்கூடாது. அப்படி அவசரப்பட்டு திருமணம் செய்தால் மணமுறிவு ஏற்படும். சிலருக்கு திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்.

ஒருவருக்கு நல்ல கணவனோ மனைவியோ அமைய குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானங்களில் சுப கிரகங்களின் கூட்டணி சேர்க்கை பார்வை முக்கியம்.


களத்திர தோஷம்  என்றால் என்ன?

களத்திரம் என்பது மண வாழ்வைக் குறிக்கும். இந்த மண வாழ்வு அமைவதற்கு ஏற்படக் கூடிய தடை தாமதங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறான வாழ்க்கைத் துணை அமைவது போன்றவையே களத்திர தோஷம்!

தடை...  தாமதத்தை ஏற்படுத்தும் தோஷங்கள்:

ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7-ம் இடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களான 6 மற்றும் 8 ஆகிய இடங்களில் அமர்ந்து மறைந்து போவதும், அல்லது பாப கிரகங்களான ராகு கேதுவோடு இணைவதாலும், அல்லது நீச்சம் என்னும் பலவீனத்தை அடைவதும், அல்லது உச்சம் பெற்று வக்கிரம் அடைவதால் தன் பலத்தை முழுமையாக இழப்பதுமாக, இதுபோன்ற கிரக அமைப்புகள் இருக்குமாயின் அது திருமணத்திற்கு தடையை உண்டுபண்ணும்.

அதேபோல 7-ம் இடத்தில் களத்திர காரகன் என்னும் சுக்கிரன் தனித்து இருந்தாலும் "காரகோ பாவ நாஸ்தி" என்னும் அடிப்படையில் திருமணத்திற்கு தடையை உண்டுபண்ணும்.  அதாவது, திருமணத்தை நடத்திக் கொடுப்பவர் சுக்கிரபகவான், ஏழாம் பாவகம் என்பது திருமணத்தைக் குறிக்கும். சுக்கிரன் திருமணத்தை நடத்திக் கொடுப்பவராக இருந்தாலும், ஏழாமிடத்தில் தனித்து இருந்தால் அவருடைய காரகமான திருமணம் என்பதும், ஏழாம் பாவம் என்னும் திருமண ஸ்தானமும் சேரும்போது அந்த ஏழாம் பாவகம் "காரகோ பாவ நாஸ்தி " என்னும் நிலையை அடைகிறது .

களத்திரகாரகன்(சுக்கிரன்) களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் இருப்பது களத்திர தோஷம் ஆகும். களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானஅதிபதி கன்னி ராசியில் நீச்சம் பெற்று அமர்வது தோஷத்தை ஏற்படுத்தும். களத்திர பாவத்திற்கு அல்லது களத்திர ஸ்தான அதிபதிக்கு அல்லது சுக்கிரனுக்கு முன் பின் பாப கிரகங்கள் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டால் களத்திர தோஷம் ஏற்படும்.

பொதுவாக சனிபகவான் கடகத்தில் அமர்ந்தாலும் சந்திரன் மகர கும்பத்தில் அமர்ந்தாலும், இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இதை புனர்பூ தோஷம் என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு தாமதமான திருமணம் ஏற்படும். திருமணம் நடந்தாலும் சற்று சன்னியாச வாழ்க்கை தான்.

ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது மற்றும் ஏழாம் வீட்டை உச்சம் பெற்ற கிரகங்கள் பார்ப்பது தோஷமாகும்.

ஒருவருடையை ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் நீசம், வக்ரம் பெற்றும் நின்று அசுபர்கள் தொடர்பு பெறுவது. இரண்டாம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ எந்த ஒரு கிரகங்களாவது உச்சம் பெற்று நின்று செவ்வாய், ராகு தொடர்பு பெறுவது திருமண தடையை ஏற்படுத்தும்.

தாமதத் திருமணத்திற்கு உரிய கிரக நிலைகள் :

குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும்போது குடும்பம் அமைய தடை வரும்.

களத்திர ஸ்தானாதிபதி எனும் 7-க்குடையவன் நீச்சம் பெற்றால் மனைவி அல்லது கணவன் வர கால தாமதம் கண்டிப்பாக உண்டு.

7-ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் முன் சொன்னதே.

களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.

7-ஆம் பாவத்திற்கோ, ஏழாம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆணிற்கோ, பெண்ணிற்கோ பிறந்த ஜாதகத்தில் சனி ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

சுக்கிரன் 2ல், 7ல் கெட்டால் திருமணம் தடையாகும்.

7ஆம் அதிபதியோடு ராகு கேது சேர்க்கை ஏற்பட்டாலும் தாமதத் திருமணமே.

சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி செவ்வாய் 7ல் இருந்து சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் மறைவு பெற்றாலும் காலம் கடந்த திருமணம்.

ராகு, கேது 1, 7ல் இருந்து சுக்கிரன் சம்பந்தம் பெறுவது இல்லறத் தடை.

7ஆம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் அஃதே.

7ஆம் பாவம் பாவ கர்த்தாரி யோகம் பெறுவது குற்றம்.

சனி சந்திரன் 9ல் இருப்பதும் நல்லதல்ல.

மேஷ லக்னமாகி சுக்கிரன் அஸ்வினி நட்சத்திர சாரம் பெறுவது...

7ஆம் அதிபதி நவாம்சத்தில் நவாம்ச லக்னத்திற்கு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

குருவும், சந்திரனும் 6, 8, 12ல் நீச்சம் பெற்றாலும்,

குரு, சூரியன் இணைந்து 1, 7ல் இருப்பதும்,

லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 7ஆம் பாவத்தை சுபர்கள் பார்க்காமல் பாவர்கள் சம்பந்தம் பெறுவதும்,

குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1ல் இருந்து சனி, 12ல் இருப்பதும் தாமத திருமணத்திற்குரிய கிரக நிலைகளே.

இங்கே சொன்ன கிரகநிலைகள்  10-ல் 6 ஜாதகங்களில் இருக்கும்.  உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும், எப்போது திருமணம் நடக்கும், எந்த திசா புத்தி அதற்கு வழிவிடும்? என்பதை அறிந்து கொள்ள நல்ல ஜோதிடரை அணுகுவது நலம்.

கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து தங்களது மணவாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளலாம்.

பரிகாரங்கள் :

முதலில் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முறைப்படி வழிபாடு செய்து, வீட்டில் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். பின்னர் திருமணஞ்சேரி, திருவிடந்தை ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

ஸ்ரீரங்கம் சென்று அங்குள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கு பங்குனி மாதம் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமாங்கல்யமும், மஞ்சள் பட்டு பாவாடையும் சாத்தி ஒரு மஞ்சள் சரடும் பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கவேண்டும். இதைத் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமை 'மஹாலக்ஷமி ஸ்தோத்ரம்' சொல்லி வந்தால்இந்த தோஷம் நீங்கி  சீக்கிரம் திருமணம் நடைபெறும்.

ஆண்களின்  ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம்:

ஆண்களின்  ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம் என்பது  மேலே சொன்ன தோஷங்களோடு சூரியன், சுக்கிரன் இருவரும் 5, 7, 9 - ம் வீட்டில் இருந்தாலும், சூரியன், ராகு அல்லது கேது சேர்ந்து 7 -ம் வீட்டில் இருந்தாலும்  2 - ம் வீடு பாதகப்பட்டாலும் ஏற்படும்.

பரிகாரங்கள்:

சூரியனால் தோஷம் ஏற்பட்டால்உங்கள் வீட்டுக்கு அருகாமையில்  உள்ள கோயிலுக்குச் செப்புப் பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சுக்கிரனால் ஏறபட்டால், ஸ்ரீரங்கம் காவிரியில் வெள்ளிக்கிழமை அன்று  ஒரு சொம்பு பாலை விட்டு, குளித்துவிட்டு, தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.

களத்திர தோஷங்களுக்கு, நவகிரக ஹோமங்கள் செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் வரும் பெளர்ணமிகளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நல்ல பலனை அளிக்கும்" எனக் கூறினார்.

மாங்கல்ய தோஷம் - நிவர்த்தி :

மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 8ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 8 ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம் அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால் தோஷம் விலகும். மாங்கல்ய தோஷம் இருந்தால் புகுந்த வீட்டில் கணவனுக்கு அல்லது மாமனார், மாமியாருக்கு பாதிப்புகள் ஏற்படலாம். சுமங்கலியாக இறந்த பெண்ணுக்கு வருடாவருடம் சுமங்கலி பூஜை செய்யாமல் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.

நாக தோஷ அமைப்பு  - நிவர்த்தி :

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் லக்னம் இருக்கும் இடங்களிலிருந்து, 2,4,5,7,8,12வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும். இரண்டாம் இடமான தனம், வாக்கு ஆகியவை குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களஸ்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள்.

பித்ரு தோஷம்   - நிவர்த்தி :

பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறாது. தாமதமாக திருமணம் நடைபெறும். அப்படியே திருமணம் நடைபெற்றாலும் விவாகரத்து ஏற்படும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் ஏற்படாது. பிரச்சினைகள் சண்டைகள் ஏற்படும். மனநோய் வரும். புத்திபாக்கியத்தில் தடை ஏற்படும். சிலருக்கு கலப்பு திருமணம் ஏற்படும். பித்ரு தோஷம் உள்ளவர்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அமாவாசை நாட்களிலும் மகாளய பட்ச நாட்களிலும் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க பாதிப்புகள் நீங்கும்.

புனர்பூ தோஷம் - நிவர்த்தி

சந்திரன் சனி கிரகத்தினால் ஏற்படுவதே புனர்பூ தோஷம்.   சந்திரன் சனி வீட்டில் இருப்பது. சனி சந்திரன் வீட்டில் இருப்பது.  சனி, சந்திரன் ஒருவருக்கொருவர் நேரடியாக பார்த்துக்கொள்வது.  சந்திரன், சனி ஒரே பாவகத்தில் இணைந்திருப்பது. சனி, சந்திரன் நட்சத்திரம் சாரத்தில் நிற்பதுசந்திரன், சனி நட்சத்திர சாரத்தில் நிற்பது போன்ற காரணிகள் புனர்பூ தோஷத்தை ஏற்படுத்தும். 

சந்திரனின் காரகமாகிய பச்சை அரிசியில் செய்த உணவினை சனியின் காரகம் பெற்ற உழைப்பாளிகள், உடல் ஊனமுற்றோர், ஏழைகளுக்கு அன்னதானம் செய்துவர புனர்பூ தோஷம் நீங்கும்.  சந்திரனின் ஸ்தலமான திருப்பதியில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடுவது நல்லது. சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாட்களில், சனி பகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலும் திருப்பதி பெருமாள் தரிசனம் செய்வது பிரச்சனைகளை குறைக்கும். ஏழை எளியோரின் திருமணத்திற்கு தாலி வாங்கி தருவது அல்லது திருமணத்திற்கு இயன்ற உதவியை செய்வது நல்லது.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.