Type Here to Get Search Results !

வற்றாத செல்வம் வளம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்



 

வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம். 

அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் தெரியும் நிலவுதான் மூன்றாம் பிறை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி செல்வம் பெருகும் . 

அதிகாலை நேரம் பிரம்ம வேளையாகும், மாலை வேளை எப்பொழுதுமே விஷ்ணு வேளையாகும், ஆக மாலை வேளையில் மேற்கு திக்கில் அடிவானத்தில் அமாவாசை மூன்றாவது தினம் சந்திர தரிசனம் கண்டு வணங்க வேண்டும்.
 


மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். 


முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும். வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும்.


சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.


சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.


சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும், முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்..

 

சந்திரனை வணங்கும் முறை


ஒரு தாம்பூழ தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்க வேண்டும். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு, தண்ணீர் என தர்மம் செய்திருக்க வேண்டும்.


மேலும் சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். அதனால் அடிபணிந்து முழு மனதோடு வணங்க வேண்டும்.


வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்.


பலன்கள்


இந்த பிறைநாள் செவ்வாய்,  வெள்ளி, சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, 


அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். 


அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும்.. அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.


பிறை தரிசனம் :

  • மூன்றாம் பிறையை தொடர்ந்து மூன்று முறை தரிசனம் செய்த மூர்க்கனும் கூட அறிவு பெறுவான் என்பது முது மொழி.
  • நான்கு பிறைகள் தொடர்ந்து தரிசித்திட நம்வினைகள் அனைத்தும்  நாசமாகும்.
  • ஐந்து பிறைகள் தொடர்ந்து தரிசித்திட  ஆண்டியும் அரசயோகம் பெற முடியும்.
  • ஆறு பிறைகள் தொடர்ந்து தரிசித்திட கல்யாணம் கைகூடும்.
  • ஏழு பிறைகள் தொடர்ந்து தரிசித்திட எப்பேர்ப்பட்ட கடன்சுமையும்  தீரும்.
  • பத்து பிறைகள் தொடர்ந்து தரிசனம் செய்திட  பாரில் புகழ் ஓங்கும்.
  • ஒரு வருடம் முழுவதும் தொடர்ந்து பிறை தரிசனம் செய்திட வம்சம் விருத்தியாகும்.


மூன்றாம்  பிறை தரிசனம் தொடர்ந்து செய்திட  அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும். செல்வம், சந்தோஷம், கல்வி   வேண்டுபவர்கள் அனைவருமே பிறை தரிசன வழிபாடு செய்திடலாம். பிறை தரிசனம்  ஆயுளை விருத்தி அடையச் செய்வதோடு அளவில்லா செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். பிறை தரிசனம் செய்திட  ஆண், பெண்  என பேதமில்லை. 


தம்பதிகளாக நின்று தரிசனம் செய்திட குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகி மனதில் நிம்மதியும், தெளிவான சிந்தனையும், ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் கூடும் என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்து. ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்...


மூன்றாம் பிறையை சிறப்பை  இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என அனைத்து மதங்களுமே ஒப்புக்கொண்டுள்ளன. 


மூன்றாம் பிறை பிறந்த கதை:


ஒருமுறை விநாயகப்பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து  உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால்,  விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.


இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு, உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின்  சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தினான். பின் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து தன் பழைய அழகை பெற்றான்.

 

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க,  பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

 

மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில்  வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.