காஞ்சிபுரம், டிச.2:
மலையன்,மாகறன் எனும் இரு அசுரர்களை வென்று முருகனுடைய திருக்கைவேல் ஊன்றப்பட்டபெருமைக்குரியது காஞ்சிபுரம் அருகே இளையனார் வேலூரில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை உடைய இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி அண்மையில் பாலாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுக்கை விக்னேசுவர பூஜை,கணபதி ஹோமம் ஆகியன நடைபெற்றன.
2 வது நாளாக திங்கள்கிழமை தனபூஜை,லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் டிச.5 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இளையனார் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோ.கமலக்கண்ணன், அறங்காவலர் குழுவின் தலைவர் து.கோதண்டராமன், அறங்காவலர்கள் பா.மண்ணாபாய், சு.விஜயன், கோயில் செயல் அலுவலர் பெ.கதிரவன் மற்றும் கோயில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.