நவகிரகங்களுடைய சஞ்சாரங்களில் மிக முக்கியமாக கருதப்படுவது சந்திரனுடைய சஞ்சாரம். நவக்கிரகங்களில் மிகவேகமாக நகரக்கூடிய கிரகமானது சந்திரன். ஒவ்வொரு ராசியிலும் சந்திர பகவான் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். அப்படி சஞ்சாரம் செய்யும் போது அந்த ராசியில் இருந்து ஆறாவது ராசிக்கு சந்திராஷ்டம தினமாக கருதப்படுகிறது. அதாவது, எளிமையாக சொல்வதென்றால் ஒரு ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் தினம் சந்திராஷ்டம தினம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மிக முக்கியமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும்.
சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.
சந்திராஷ்டமம் = அஷ்டமம் + சந்திரன். உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17-வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.
மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள், பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.
புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள், புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள்.
ஏனென்றால் சந்திரன் என்பவர் மனோகாரகன். மனதை குறிக்கக்கூடிய கிரகம். ஸ்தானங்களில் நான்கு ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகிறது. 3 - 6 - 8 - 12 ஆகிய ஸ்தானங்கள் மறைவு ஸ்தானங்கள்.
இதில் எட்டாவது ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய காலகட்டம் சந்திராஷ்டமமாக நாம் எடுத்துக் கொள்கிறோம். எட்டாம் இடம் என்பது ஆயுள் ஸ்தானம். இந்த நாட்களில் நமது மனம் ஒரு நிலைப்படுவது சிறிது சிரமமாக இருக்கும். அதனால்தான் சந்திராஷ்டம தினங்களில் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதை நமது முன்னோர்கள் தவிர்க்கச் சொன்னார்கள்.
எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. அதாவது ஒருவிதமான பதற்றமான நிலையில் மனம் சஞ்சரிக்கும். எந்தவொரு முடிவையும் சரிவர எடுக்கமுடியாது என்பதால் சந்திராஷ்டம நாட்களை தவிர்க்கின்றனர்.
17-ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன். உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள். ஒரு ராசிக்கு ஒன்பது பாதங்கள். எனவே இரண்டேகால் நட்சத்திரம் அடங்கியது ஒரு ராசி.
நட்சத்திரரீதியாக சந்திராஷ்டம நட்சத்திரம் :
- அசுபதி - விசாகம் 4;அனுஷம் 1, 2, 3
- பரணி - அனுஷம் 4;கேட்டை 1, 2, 3
- கிருத்திகை - கேட்டை 4;மூலம் 1, 2, 3
- ரோஹிணி - மூலம் 4;பூராடம் 1, 2, 3
- மிருகசீரிஷம் - பூராடம் 4;உத்தராடம் 1, 2, 3
- திருவாதிரை - உத்தராடம் 4;தி்ருஓணம் 1, 2, 3
- புனர்பூசம் - தி்ருஓணம் 4;அவிட்டம் 1, 2, 3
- பூசம் - அவிட்டம் 4;சதயம் 1, 2, 3
- ஆயில்யம் - சதயம் 4;பூரட்டாதி 1, 2, 3
- மகம் - பூரட்டாதி 4;உத்திரட்டாதி 1, 2, 3
- பூரம் - உத்திரட்டாதி 4;ரேவதி 1, 2, 3
- உத்திரம் - ரேவதி 4;அசுபதி 1, 2, 3
- ஹஸ்தம் - அசுபதி 4;பரணி 1, 2, 3
- சித்திரை - பரணி 4;கிருத்திகை 1, 2, 3
- ஸ்வாதி - கிருத்திகை 4;ரோஹிணி 1, 2, 3
- விசாகம் - ரோஹிணி 4;மிருகசீரிஷம் 1, 2, 3
- அனுஷம் - மிருகசீர்ஷம் 4;திருவாதிரை 1, 2, 3
- கேட்டை - திருவாதிரை 4;புனர்பூசம் 1, 2, 3
- மூலம் - புனர்பூசம் 4;பூசம் 1, 2, 3
- பூராடம் - பூசம் 4;ஆயில்யம் 1, 2, 3
- உத்திராடம் - ஆயில்யம் 4;மகம் 1, 2, 3
- தி்ருஓணம் - மகம் 4;பூரம் 1, 2, 3
- அவிட்டம் - பூரம் 4;உத்தரம் 1, 2, 3
- சதயம் - உத்திரம் 4;ஹஸ்தம் 1, 2, 3
- பூரட்டாதி - ஹஸ்தம் 4;சித்திரை 1, 2, 3
- உத்திரட்டாதி - சித்திரை 4;ஸ்வாதி 1, 2, 3
- ரேவதி - ஸ்வாதி 4;விசாகம் 1, 2, 3
🎆 Also Read சந்திராஷ்டம தினங்களில் என்னென்ன செய்யலாம்?