காஞ்சிபுரம், மார்ச் 10:
சென்னை}பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழியில் மரகதவல்லித்தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
108 வைணவத் திருக்கோயில்களில் 88 வது திவ்ய தேசமாக இருந்து வரும் இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாசி மாத பிரமோற்சவம் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் 7 ஆம் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் விஜயராகவப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பஜனை கோடியினர் பஜனைப் பாடல்களை பாடியபடியே வந்தனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாளை தரிசித்தனர். திருப்புட்குழி, பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.