காஞ்சிபுரம், மார்ச்.29
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பல்லவ உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்கது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜசுவாமி கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 7 நாட்கள் பல்லவ உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டுக்கான உற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியதை யடுத்து ப்ராணதார்த்தி ஹரவரதர் மற்றும் பெருமாள் திருமலையிலிருந்து 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளினர்.சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.மதியம் பரிமளம் கொண்டு வரப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் நாதசுவர இசைக்கு ஏற்ப 7 திரைகள் ஒவ்வொன்றாய் திறக்கும் திரை திறத்தல்,கோயில் புராணப்படலம் வாசிக்கும் நிகழச்சி ஆகியனவும் நடைபெற்றது.
இதனையடுத்து ஆலயத்தின் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளி பின்னர் மீண்டும் ஆலயத்துக்கு திரும்பினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
பல்லவ உற்சவம் வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.