காஞ்சிபுரம், மார்ச் 27:
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ அறம் வளத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் 52 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ அறம் வளத்தீஸ்வரர் கோயில்.இக்கோயில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டதுடன் கோயிலுக்கு புதிதாக ராஜகோபுரமும் நிர்மாணிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 25 ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின. யாகசாலை பூஜைகளை காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் பூஜகர் இஷ்டசித்தி ஏ.பிரபாகர குருக்கள், கே.வி.சுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை யாகசாலையில் மகா பூரணாகுதி தீபாராதனைகள் நிறைவு பெற்று சிவச்சாரியார்களால் புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கோயில் பூஜகர் வி.கணபதி குருக்கள் சிறப்பு அபிஷேகங்களை நடத்தினார்.சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி வளத்தீஸ்வர் கோயில் தெரு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக்குழுவின் தலைவர் ஏ.முத்துச்சாமி, பொருளாளர் ஆர்.பெருமாள் மற்றும் குழு உறுப்பினர்கள், அறம் வளத்தீஸ்வரர் கோயில் தெருவாசிகள், செங்குந்த மரபினர் சமூகத்தினர் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாலையில் ஆலயத்தில் திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.காஞ்சிபுரம் டிஎஸ்பி கி.முரளி தலைமையில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.