காஞ்சிபுரம், மார்ச் 9:
காஞ்சிபுரத்தை அடுத்த உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் அமைந்துள்ள அத்திலிங்கத்துக்கு மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் அருகில் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக நட்சத்திர விருட்ச விநாயகர் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணிக்கையாக வழங்கிய அத்தி மரத்தில் ருத்ராட்சங்களால் செய்யப்பெற்ற அத்தி விருட்ச ருத்ராட்சலிங்கேசுவரர் அருள்பாலித்து வருகிறார்.
மகா சிவராத்திரியையொட்டி அத்திலிங்கத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்தனர்.