காஞ்சிபுரம், மார்ச் 7:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது 55 வது ஜெயந்தி மகோற்சவம் இம்மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 7 ஆம் தேதி வியாழக்கிழமை வரை தினசரி மடத்தில் வேதபாராயணம், வித்வத்சதஸ்,ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியனவும் நடைபெற்றது.
ஸ்ரீ விஜயேந்திரரின் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை காலையில் ஹோமங்கள், ருத்ர பாராயணம் மற்றும் மகா பெரியவர் சுவாமிகள், ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது பிருந்தவானத்தில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது.
தங்கக்கவச அலங்காரத்தில் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மாலையில் பத்மேஷ் பரசுராமன் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ விஜயேந்திரர் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி காஞ்சிகாமாட்டி சங்கர மட வரவேற்புக் குழு மற்றும் ராதாம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை ஆகியன சார்பில் ஸ்ரீ மடத்தின் நுழைவுவாயிலில் அன்னதானம் நடைபெற்றது.
அன்னதானத்தை சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வரவேற்புக்குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி.ஜீவானந்தம், சோழன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவி ஜெயராம், பி.மோதிலால், ராஜேஷ்,சுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.