காஞ்சிபுரம்,ஏப்.28:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கஜமுகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
![]() |
படவிளக்கம்: கூழமந்தல் மைதானத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவர்கள்(இடமிருந்து) நட்சத்திர விருட்ச விநாயகர், கங்கை கொண்ட சோழீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் பேசும் பெருமாள் |
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உக்கம்பெரும்பாக்கம் அருகே கூழமந்தல் கிராமத்தில் நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் உற்சவர் விநாயகர் மூஷிக வாகனத்திலும், அதே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பேசும்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக உற்சவர் பேசும் பெருமாள் கருட வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கை கொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும் கூழமந்தல் மைதானத்துக்கு ஊர்வலமாக எழுந்தருளினார்கள்.
முதலாவதாக விநாயகர் சிவனையும்,பெருமாளையும் 3 முறை வலம் வந்து அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு கஜாமுகனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவபெருமானும்,பெருமாளும் ஒன்றாக இணைந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்ததால் ஒருங்கிணைந்த சித்திரைப் பெருவிழாவாகவும் அமைந்திருந்தது.கஜமுகாசுரனின் வதம் நிறைவு பெற்ற பிறகு விநாயகர், சிவன்,பெருமாள் ஆகிய 3 பேருக்கும் மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதன் பின்னர் மூன்று தெய்வங்களும் இணைந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் கூழமந்தல், உக்கம்பெரும்பாக்கம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.