காஞ்சிபுரம்,ஏப்.25:
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் சித்திரை உத்திரப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
பெருமாள் ஆமை வடிவில் சிவபெருமானை வணங்கியது உட்பட பல்வேறு சிறப்புகளை உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தரம்பிகை உடனுறை கச்சபேசுவரர் திருக்கோயில்.இக்கோயில் சித்திரை உத்திரத் திருவிழா நிகழ் மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏப்.20 ஆம் தேதி திருக்கல்யாணமும்,ஏப்.22 ஆம் தேதி மகா ரதம் எனும் தேரோட்டமும் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை 12 வது நாள் நிகழ்ச்சியாக வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.உற்சவர் கச்சபேசுவரரும்,சுந்தராம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
வெள்ளித் தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எம்.சிவகுரு,கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன்,திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள், செயலாளர் சுப்பராயன், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், வாரியார் ஆன்மீகத் தொண்டு மன்றத்தின் செயல் தலைவர் வி.ஜீவரெத்தினம்,முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்பி.காஞ்சி பன்னீர் செல்வம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
வரும் 29 ஆம் தேதி காலையில் 108 சங்காபிஷேகமும்,மாலையில் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.மே மாதம் 3 ஆம் தேதி புஷ்பப்பல்லக்கு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.