காஞ்சிபுரம், ஏப்.29:
காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
![]() |
படவிளக்கம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்(உள்படம்) ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப் பெருமாள் |
காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரத்தில் ஸ்ரீ புஷ்பல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கஜேந்திர மோட்சம் நடைபெற்ற பெருமைக்குரிய இக்கோயிலின் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின் கோயில் திருப்பணிகள் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக கோயிலின் பிரமோற்சவத்தையொட்டி கொடியேற்றம் நிகழ் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது.ஏப்.25 ஆம் தேதி பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்தார்.
இதனையடுத்து விழாவின் 7 வது நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் ஆதிகேசவப்பெருமாள் ராஜ அலங்காரத்தில் தேரில் பவனி வந்தார்.தேர்த்திருவிழாவில் ஆலய அறங்காவலர் குழுவின் தலைவர் எஸ்கேபிஎஸ் சந்தோஷ் குமார்,கோயில் செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.
விழாவில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசன், மாநகராட்சி மண்டலக்குழு உறுப்பினர் எஸ்.சாந்திசீனிவாசன், மாமன்ற உறுப்பினர் எஸ்கேபி கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எம்.இளங்கோவன், ஜெ.தேவிகா ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டர்.தேர் காஞ்சிபுரம் வரதாரஜப் பெருமாள் கோயில் மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தது.
மாலையில் உற்சவருக்கு ஆலய அர்ச்சகர்கள் பி.முரளிபட்டாச்சாரியார்,வி.கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்புத் திருமஞ்சனம் செய்தனர். நாளை மே முதல் தேதி கஜேந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி உற்சவமும்,மே.2 ஆம் தேதி வெற்றி வேர் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வருகிறார்.வரும் மே.5 ஆம் தேதி புஷ்பப்பலக்கில் பெருமாள் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது.