காஞ்சிபுரம், மே 7-
காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றத்தில் அமைந்துள்ள சமணர்களின் கோயிலான திரைலோக்கியநாதர் ஆலயத்தில் மகாவீரர் ஜெயந்தி விழாவையொட்டி பகவான் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் திங்கள்கிழமை வீதியுலா வந்தார்.
படவிளக்கம் : ஜெயந்தி விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீதியுலா வந்த மகாவீரர்
காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றத்தில் சமணர்கள் கோயிலாக இருந்து வருவது திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திர பிரபாநாதர் ஆலயம். காஞ்சிபுரத்தில் சமணர்களின் அடையாளமாகத் திகழும் இக்கோயில் பகவான் ஜினாலயம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழக தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இக்கோயிலுக்கு காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சமணர்கள் பலர் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோயிலில் மகாவீரர் ஜெயந்தி விழாவையொட்டி பகவானின் ஜினகாஞ்சி வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீரர் திருஉருவச்சிலை வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
விழாவையொட்டி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. சமணர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் நந்தி மித்ரன் தலைமையிலான விழாக்குழுவினர்கள், சமண சமயத்தை சேர்ந்தவர்கள்,தர்மதேவி கோலாட்ட குழுவினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.