படவிளக்கம்: குருபூஜை விழாவையொட்டி தேரில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்த மாணிக்கவாசகர்
காஞ்சிபுரம், ஜூலை 14:
காஞ்சிபுரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழாவையொட்டி பணாமணீஸ்வரர் கோயிலிலிருந்து காலையில் பால்க்குட ஊர்வலமும், ருத்ராட்ச தேரில் மாணிக்கவாசகர் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் அமைந்துள்ளது காமாட்சி அம்மை உடனுறை பணாமுனீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜையையொட்டி காலையில் கொடியேற்றமும் ,பின்னர் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர் காஞ்சிபுரம் சிவனடியார்கள் சார்பில் ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் செய்யப்பட்ட தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி பவனி வந்தார். தேர் பவனியின் போது திரளான பெண் சிவனடியார்கள் உட்பட பலரும் பால்க்குடம் எடுத்து வந்தனர்.
தேரானது பணாமுனீஸ்வரர் கோயிலிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து மீண்டும் ஆலயத்துக்கு வந்து சேர்ந்ததும் மாணிக்கவாசகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பணாமணீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.