காஞ்சிபுரம், ஜூலை 21:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா, ஆனி மற்றும் ஆடி மாதங்களில் மட்டும் ஆண்டுக்கு 3 முறை கருட சேவையில் உற்சவர் வரதராஜப் பெருமாள் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
நிகழாண்டுக்கான ஆடி மாத கருட சேவையையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாள் திருமலையிலிருந்து வாகன மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அம்மண்டபத்தில் தங்கக்கருட வாகனத்தில் அலங்காரமாகி ஆலய வளாகத்தினுள் உள்ள அனந்தசரஸ் திருக்குளம் முன்பாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக உற்சவர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தினுள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டே மீண்டும் வாகன மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
பின்னர் ஆழவந்தார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் தலைமயில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.