காஞ்சிபுரம், ஜூலை 21:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனத்தில் அமைந்துள்ள திரிசூல காளியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புலிவனத்தில் பழமை வாய்ந்த திரிசூல காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் 40 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழாவையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனையடுத்து உலக நன்மைக்காக வேள்வி பூஜை,கூழ் வார்த்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மாலையில் திருவிளக்கு பூஜை, ஆன்மீக சொற்பொழிவு ஆகியனவும் நடைபெற்றது.
ஆலயத்தில் காப்புக்கட்டியிருந்த பக்தர்கள் பலரும் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். சில பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் கையில் வைத்துக் கொண்டு தீ மிதித்து அம்மனை தரிசித்தனர்.
இரவு அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்புலிவனத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்களும் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.