காஞ்சிபுரம், ஜூலை 8
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரத்தில் கிரை மண்டபம் அருகே அமைந்துள்ளது விளக்கொளிப் பெருமாள் கோயில் மற்றும் தூப்புல் வேதாந்த தேசிகர் திருக்கோயில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
பிரம்மா யாகம் செய்த போது ஏற்பட்ட இருளை நீக்கிடவும், யாகத்தை இடையூறு இல்லாமல் நடத்தவும் பிரம்மன் பெருமாளை சரணடைந்தார். அந்த நேரத்தில் பெருமாள் விளக்கொளியாய் அவதரித்து யாகம் சிறப்பாக நடைபெற உதவி செய்ததால் இப்பெருமாளுக்கு விளக்கொளிப் பெருமாள் என்றும் திபப்பிரகாசர் என்றும் பெயர் உண்டானது.
இக்கோயில் கொடிமரம் உட்பட ஆலயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்போஷணம் நடைபெற்றது. சம்ப்ரோஷணத்திற்கான யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக 5 வது நாளாக யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு மகா சம்ப்ரோஷணம் பட்டாச்சாரியார்களால் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மகா சம்ப்ரோஷண ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஜெ.ப.பூவழகி,தக்கார் ப.முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,உபயதாரர்கள்,கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் சவுத் இந்தியன் ஆர்ட் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீரவிராம்,மேற்கு மாம்பலம் என்.இ.தேவராஜன், ஸ்ரீ கண்டாவதார சுவாமி கைங்கர்ய டிரஸ்ட் அறங்காவலர் ஏ.கே.சடகோபன், சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.நரசிம்மன், எஸ்.நாராயணன், அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் ரா வான்மதி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.