காஞ்சிபுரம்,அக்.20:
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழமை வாய்ந்த நகரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் கீழண்டை ராஜவீதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த நகரீஸ்வரர் ஆலயம். கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் இம்மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கின.
காஞ்சிபுரம் இஷ்டசித்தி ஏ.பிரபாகர் சிவாச்சாரியார், கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 19 ஆம் தேதி சனிக்கிழமை நவக்கிரக ஹோமம்,தனபூஜை ஆகியனவும், 20 ஆம் தேதி மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இருந்து சிவாச்சாரியார்களை ஆலயம் அழைத்து வரும் நிகழ்வு ஆகியனவும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகா பூரணாகுதி தீபாராதனை நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் சு.வஜ்ஜிரவேலு,தக்கார் ப.முத்துலட்சுமி ஆகியோர் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று திங்கள்கிழமை அதிகாலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் கோயில் அர்ச்சகர் ஆர்.ஹரிஷ் மனோகர் சிறப்பு அபிஷேகங்களை செய்தார்.