காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் திருக்கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவையொட்டி சுவாமியும், அம்மனும் கோயில் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பழமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் திருக்கோயில்.பெருமாள் சிவனை ஆமை வடிவத்தில் வழிபட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் கடந்த 2014 ஆம் ஆண்டு தெப்பத்திருவிழா தொடங்கி தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்றது.
அதன்பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ஆலயத்தின் அலங்கார மண்டபத்திலிருந்து உற்சவர் கச்சபேசுவரரும், சுந்தராம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த தெப்பத்திற்கு எழுந்தருளினார்கள். தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.
தெப்பத் திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின்வளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் திருக்குள தெப்போற்சவ அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்தர் மரபினர் சங்க நிர்வாகிகள், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தெப்பத் திருவிழா இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.