காஞ்சிபுரம், நவ.21:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே நெய்யாடுபாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத மருந்தீசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடையது காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்யாடு பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத மருந்தீசுவரர் திருக்கோயில்.இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆலய திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.முதல் நாள் யாகசாலை பூஜையின் போது கணபதி ஹோமம்,கோ.பூஜை, லட்சுமி ஹோமம்,நவக்கிரக ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி ஆகியனவும் நடைபெற்றன.
வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் சிவாச்சாரியார்களால் புனித நீர்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மூலவர் மருந்தீசுவரர் மற்றும் மரகதவல்லித் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் திருக்கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் லெனின், அறநிலையத்துறை ஆய்வாளற் பிரித்திகா மற்றும் நெய்யாடுபாக்கம் கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.