காஞ்சிபுரம், நவ.24:
காலபைரவர் ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில். இக்கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய் பிறை அஷ்டம் நாட்களில் அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவர் ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
எலுமிச்சை மாலை மற்றும் மலர்மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று காலபைரவரை தரிசித்தனர்.