காஞ்சிபுரம், டிச.13-
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பெருமாள் ஆமை வடிவில் சிவபெருமான வணங்கிய பெருமைக்குரிய கோயிலான காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்து சொக்ப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும்,கோயில் ராஜகோபுரத்தில் கார்த்திகை தீபரம் ஏற்றும் நிகழ்வும் ந டைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களான முத்தீஸ்வரர், அறம் வளத்தீசுவரர், வழக்கறுத்தீசுவரர் ,சித்தீஸ்வரர்,நகரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு நண்பகலில் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
மாலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி,தெய்வான சமேதராக ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையிலிருந்தே ஆலயத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கேசவன்,கோயில் தலைமை அர்ச்சகர் காமேசுவர குருக்கள் ஆகியோர் தலைமையில் கோயில் பூஜகர்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சனிக்கிழமை மாலையில் கொண்டாடப்படுவதையொட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.