காஞ்சிபுரம், டிச.15:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் திருக்கோயிலில் நிகழாண்டுக்கான கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி திரளான பக்தர்கள் மண்சட்டியில் அகல்விளக்கு ஏந்தியவாறு தலையில் வைத்து ஆலயத்தை வலம் வந்தும், நாக பூஜை செய்தும் வழிபட்டனர்.
பெருமாள் ஆமை வடிவில் சிவபெருமான வணங்கிய வரலாற்றுச் சிறப்பு உடையது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமதே கச்சபேசுவரர் திருக்கோயில்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரிசிமாவால் தயாரிக்கப்பட்ட மாவிளக்கில் தீபம் ஏற்றி அதை ஒரு மண்சட்டிக்குள் வைத்து தலையில் சுமந்து கொண்டு ஆலயத்தை வலம் வந்து சுவாமியை தரிசிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இதனால் தலை சார்ந்த நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.இதுவே கடைஞாயிறு திருவிழா எனப்படுகிறது.
நிகழாண்டுக்கான கார்த்திகை மாத கடை ஞாயிறு திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தலையில் மண்சட்டியில் அகல் விளக்கினை ஏந்தியவாறு ஆலயத்தை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சிலர் குடும்பம், குடும்பாக கோயில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் அமைந்துள்ள நாகதேவதைகளுக்கு மஞ்சள் தடவி,நெய் விளக்கேற்றியும் தரிசனம் செய்தனர். திரளான பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் கச்சபேசுவரரை தரிசனம் செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முன்னதாக மூலவர் கச்சபேசுவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சிவகுரு, பெருமாள் மற்றும் கோயில் மேலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் கோயில் பூஜகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ஆலயத்தின் முன்புறம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.