Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பாரிவேட்டை உற்சவம்





காஞ்சிபுரம், ஜன.15:


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று புதன்கிழமை பழையசீவரம் மழைக்கு எழுந்தருளி பாரிவேட்டை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.


வைணவத் திருக்கோயில்கள் 108 இல் ஒன்றாக இருந்து வருவதும்,அத்திவரதர் புகழுக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ சுவாமி திருக்கோயில். ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள தனது ஆலயத்திலிருந்து பல்லக்கில் பழையசீவரம் மலைக்கு எழுந்தருளி பாரிவேட்டை உற்சவம் கண்டருள்வது வழக்கமாக இருந்து வருகிறது.


இதன்படி நிகழாண்டு இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயத்திலிருந்து தண்டிகை பல்லக்கில் ஐயம்பேட்டை, திம்மராஜம்பேட்டை, வாலாஜாபாத் வழியாக பழையசீவரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு எழுந்தருளினார்.


லட்சுமி நரசிம்மர் கோயிலில் வரதராஜசுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பழைய சீவரம் கோயிலிலிருந்து அதற்கு அருகேயுள்ள மலையுச்சிக்கு சென்றார்.


பின்னர் அங்கிருந்து மதியம் கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது பழைய சீவரம் உற்சவர் லட்சுமி நரசிம்மர் எதிர்கொண்டு அழைத்தார்.  இருவருக்கும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.


இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் வரதராஜரும்,பழைய சீவரம் லட்சுமி நரசிம்மரும் திருமுக்கூடலில் உள்ள அப்பன் வெங்கடாஜலபதி சந்நிதிக்கு எழுந்தருளினர். அங்கு சாலவாக்கம், காவாந்த தண்டலம் உட்பட 5 பெருமாள்கள் ஒன்றாக இணைந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.


பெருமாள்கள் ஒன்றாக சந்திக்கும் நிகழ்வை காண வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீ பெரும்புதூர்,சுங்குவார் சத்திரம், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


பின்னர் வரதாரஜப் பெருமாள் பல்வேறு கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி ஆலயத்துக்கு எழுந்தருளினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.